பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது குறித்தே சிந்திக்க வேண்டும்- மைத்திரி

272 0

புதிதாக தோற்றுவிக்கின்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்வது எவ்வாறு என்பது தொடர்பாகவே அனைவரும் சிந்தித்து செயலாற்ற வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை- மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் அரசியலுக்கு வந்து 52 வருடங்கள் ஆகின்றன. இதில் 26 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன்.

இதன்போது பல்வேறு போராட்டங்களை எல்லாம் கடந்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.

மேலும் பொலன்னறுவை மாவட்டத்தில் பாடசாலைகள், சமய வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை அமைத்துள்ளேன். அந்தவகையில் 99 வீதமான சிறந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்துள்ளேன்.

இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களின் முக்கிய பிரச்சினை என்ன? அப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வை பெற்றுக்கொடுப்பது என்பது பற்றிய முதலில் ஆராய வேண்டும்.

மேலும் மக்களின் வாழ்க்கை சிறந்த முறையில் எவ்வாறு முன்னோக்கி கொண்டுச்செல்வது என்பது தொடர்பாக கவனம் செலுத்தவே நான் விரும்புகின்றேன்.

அதாவது இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றது. ஒன்று உருவாகின்ற பிரச்சினை மற்றையது தோற்றுவிக்கும் பிரச்சினை

அதாவது வெள்ளம், சுனாமி, மண்சரிவு ஆகியவை திடீரென உருவாகின்ற பிரச்சினைகளாகும்.

அதேபோன்று தோற்றுவிக்கின்ற பிரச்சினையென்றால் மனிதன் புதிதாக ஏதாவது விடயம் தொடர்பாக பிரச்சினையை தோற்றுவித்து அழிவடைய செய்வதாகும்.

இதற்கு உதாரணமாக கூறவேண்டுமாயின் நாட்டில் 25 வருடம் நீண்டகால யுத்தம் பிரபாகரனுடன் இடம்பெற்றது. இதன்போது நாட்டை சீரழித்ததும் பிரபாகரன்தான்.

அப்போது எத்தகையதோர் பிரச்சினைகளுக்கு மக்கள் அனைவரும் முகம் கொடுத்திருந்திருந்தோம் என்பதை நான் அறிவேன். இதுதான் தோற்றுவிக்கின்ற பிரச்சினையாகும்.

எனவே  தோற்றுவிக்கின்ற  பிரச்சினையில் இருந்து விடுபட்டு எவ்வாறு முன்னோக்கி நகர வேண்டும் என்பது தொடர்பாக மக்கள் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

இதேவேளை கசிப்பு, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் பாவனையினால் சட்ட விரோதமான செயற்பாடுகளை மேற்கொண்டு விரைவில் உயிரிழக்கின்றனர்.

ஏனைய நாடுகளில்  இவைகளுக்கு சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு  இருக்கின்றது. அதேபோன்று இலங்கையிலும் இருக்கின்றது. சில போதைப்பொருள் பாவனைக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும் இவைகளை ஏன் அருந்துகின்றார்கள் என்று தெரியவில்லை. சாதாரண மக்களே அதிகம் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.

அண்மையில் பாடசாலையொன்றில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் சில மாணவர்கள் மதுபானம் அருந்தி, குழப்பங்களில் ஈடுபட்டனர். இதன்போது சிலர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

நாட்டில் ஒருநாளைக்கு இடம்பெறும் அனர்த்தங்களில் 9 பேர்க்கு மேற்பட்டோர் மரணிக்கின்றனர். அதில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே அதிகம் மரணிக்கின்றனர். மேலும் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு தனது ழுழு வாழ்க்கையை  துக்கத்திலேயே கழிக்க வேண்டிய நிலைமைக்கு  இத்தகையவர்கள் தள்ளப்படுகின்றனர்” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.