சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு தொடர்ந்தும் திறந்தே காணப்படுவதாக அந்தக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரணில் தரப்பு ஆதரவாளருமான ருவன் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவினால் யாருக்கும் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், “நேற்றும் எமது கட்சியின் சில உறுப்பினர்கள், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்கள். அதாவது, கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு ராஜபக்ஷவினரின் சதித் திட்டமே காரணம் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால், உண்மையில் ராஜபக்ஷக்களுடன் தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டிய தேவை எமக்குக் கிடையாது. எமக்கும் இந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கமாகும்.
ஒரே கட்சிக்குள் பிளவுபட்டுக்கொண்டு எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள முடியாது. இந்தப் பிளவினால், எமக்கோ அல்லது மக்களுக்கோ எந்தவொரு நன்மையும் கிடையாது என்பதுதான் உண்மையாகும். மாறாக, ராஜபக்ஷக்களுக்குத் தான் இதனால் நன்மை ஏற்படும்.
சஜித் பிரேமதாசவுக்கோ அவரது தரப்பினருக்கோ நாம் என்றும் எதிரானவர்கள் கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு இன்னும் இவர்களுக்காகத் திறந்துதான் காணப்படுகிறது. எனவே, வேட்புமனுத் தாக்கல் செய்யும் முன்னர் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என்றே நாம் எதிர்ப்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

