பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷ்னி லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது.
மேலும், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி, மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். வரும் 11-ம் தேதிவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.
இந்நிலையில், யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மகள் ரோஷ்னி கபூர் என்பவர் இன்று மாலை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் லண்டன் நகருக்கு தப்பிச் செல்ல முயன்றபோது மும்பை விமான நிலையத்தில் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ராணா கபூரின் மனைவி பிந்து கபூர், மகள்கள் ராக்கி கபூர் டான்டன், ராதா கபூர் மற்றும் ரோஷ்னி கபூர் ஆகியோரை தேடப்படும் நபர்களாக அமலாக்கத்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

