மத உணர்வுகளை தூண்டும் எந்த சட்டத்தையும் விசிக ஏற்காது- திருமாவளவன் பேச்சு

304 0

மத உணர்வுகளை தூண்டும் எந்த சட்டத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்காது. எங்கள் கட்சி சிறியது. ஆனால் கொள்கை வலிமையானது என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

பாளையில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குடியுரிமை திருத்த சட்டம் மூலம் முஸ்லிம்களை தனியாக பிரிக்க நினைக்கின்றனர். ஆனால் தற்போது நிலை தலைகீழாக மாறி விட்டது. அனைத்து மதத்தினரும் ஒன்று சேரும் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களை மோடி ஆதரீப்பார் என்று உறுதியாக கூறமுடியாது. எனவே இப்போது சிறுபான்மை சமுகத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இன்று இதன் விதை ஊன்றப்பட்டுள்ளது. இது தமிழகம் முழுவதும் பரவும்.

பா.ஜ.க.தனி கட்சி அல்ல. ஆர்.எஸ்.எஸ். வழித் தோன்றல் தான். அவரது கொள்கை, கனவுகளை பா.ஜ.க. நிறைவேற்றி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் பிரச்சினை ஏற்படும் என்று அவர்களுக்கு தெரியும். தெரிந்தே அவர்கள் கொண்டு வருகிறார்கள்.

நமது நாட்டின் சட்டத்தை என்றுமே ஆர்.எஸ்.எஸ். நம்புவதில்லை. அவர்கள் தனி கொடி, தனி சட்டம், தனி இந்து தேசம் என கொண்டு வர முயற்சிக்கிறார்கள். மத உணர்வுகளை தூண்டும் எந்த சட்டத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்காது. எங்கள் கட்சி சிறியது. ஆனால் கொள்கை வலிமையானது. ஒரு போதும் அதனை விட்டு கொடுக்க மாட்டோம்.

டெல்லி கலவரம் வரலாறு காணாத வன்முறையை ஏற்படுத்தி உள்ளது. அமித்ஷா கையில் தான் டெல்லி போலீஸ் உள்ளது. ஆனால் அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். இதனை நாங்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேச முற்பட்ட போது அனுமதி மறுக்கப்பட்டது. இனிமேல் இதனை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.