தமிழரின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்க சுயேட்சைக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன- கோடீஸ்வரன்

282 0

தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிப்பதற்காகவே, தமிழ் பகுதிகளில் பல்வேறுக் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அம்பாறையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் கவீந்திரன் கோடீஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “பூகோளவியல் ரீதியாக தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை அம்பாறை மாவட்டத்தில் சந்தித்து வருகின்றனர்.

மேலும் அம்பாறை மாவட்டத்தின் மக்களுக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் பூர்வீகத்தை இழக்க நேரிடும். நிலங்களை பறிகொடுக்க நேரிடும். நமது கலை, கலாசார விடயங்களில் ஏனைய சக்திகளின் தலையீடு இருக்கும்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியத்தை சிதைக்க, தேசிய சர்வதேச ரீதியில் பல சக்திகள் உள்நுழையப்பட்டிருக்கின்றன.

பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக இருக்கும் சிலர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். இது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்ற பொறுப்பும் கடமையுமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.