சீனாவில் கோவிட்-19 பலி எண்ணிக்கை 3012 ஆக அதிகரிப்பு: மீள முடியாத வூஹான் மக்கள்- சீனாவின் பதிய கவலை

308 0

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,012 ஆக உயர்ந்துள்ளது. ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரம் இன்னமும் கூட முழு அடைப்பிலிருந்து விடுபட முடியவில்லை, இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நகரம் பிற நகரங்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதங்களை நெருங்கியுள்ளது.

வூஹான் நகரில் மட்டுமே 2,305 பேர் கரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர். ஆனால் சீனாவின் அதீத கெடுபிடி உண்மையில் பலனளிக்கத் தொடங்கியுள்ளது, கரோனாவுக்கு புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

ஆனால் சுகாதார கமிஷன் கூறும்போது மார்ச் 4ம் தேதி 119 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது, மார்ச் 5ம் தேதி இது 139 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான வூஹான் இருந்து நாடு முழுவதும் பரவிய கரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பரவுவது ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,981லிருந்து 3,012 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,270லிருந்து 80,409 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சுமார் 80 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளதையடுத்து இந்த நாடுகளிலிருந்து சீனாவுக்கு மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக புதிய கவலை ஏற்பட்டுள்ளது.