சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
இது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தையொன்று சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (புதன்கிழமை) முற்பகல் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் குறித்து சஜித் மற்றும் ரணில் தரப்பினரிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என ரணில் தரப்பினர் வலியறுத்தி வரும் அதேவேளை, தொலைபேசி சின்னத்தில் போட்டியிட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, கூட்டணியின் செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார இதனை தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இன்றைய கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நம்பப்படுகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டமும் இன்று பிற்பகல் மீண்டும் இடம்பெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

