கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு சம்பவத்தின் நான்காவது சந்தேகநபரான அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமிக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக தளர்த்தி கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த முறைப்பாடு கடந்த தினம் அழைக்கப்பட்ட போது மொஹமட் ரூம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, வௌிநாட்டில் நடாத்தப்படும் தேயிலை கண்காட்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது கட்சிக்காரர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை வௌிநாடு செல்ல வேண்டியுள்ளதாக நீதிமன்றில் தெரிவித்தார்.
அதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை குறித்த காலப்பகுதியில் தளர்த்தி உத்தரவிடமாறு நீதிமன்றில் கோரியிருந்தார்.
குறித்த கோரிக்கையை ஆராயந்த நீதவான் சந்தேகநபர் மொஹமட் ரூமிக்கு குறித்த காலப்பகுதியில் வௌிநாடு செல்ல அனுமதி அளித்த நிலையில், குறித்த காலப்பகுதிக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை தளர்த்துமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

