நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் ஜனாதிபதியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை), இபலோகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றியினை பெற்றுக்கொண்டோம். இன்று ஜனாதிபதி நம்மவராக இருக்கின்றார்.
ஆனால் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு பெரும்பான்மை பலம் கிடையாது. புதுவருட பிறப்பினை முன்னிட்டு மக்களுக்கு அபிவிருத்தி மற்றும் நிவாரண நடவடிக்கைளை முன்னெடுக்க கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கணக்கு வாக்கெடுப்பு திருத்தத்தை கொண்டு வந்தோம்.
ஆனால் இதற்கு எதிர்தரப்பினர் ஆதரவு வழங்கவில்லை. இதன் காரணமாக அபிவிருத்தி பணிகளை தற்துணிவுடன் முன்னெடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.
மேலும் இரு தரப்பினருக்குமிடையில் வேறுபாடுகள், கட்சி மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக்க கொண்டு தோற்றம் பெற்றால் கடந்த ஐந்து வருட கால ஆட்சி முறைமையே தோற்றம் பெறும். இதனால் எவ்வித பயனும் எவருக்கும் கிடைக்கப் பெறாது.
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக நாடு பாரிய பின்னடைவினை எதிர்க்கொண்டது.
இதன் தாக்கம் நாட்டு மக்களையே சென்றடைந்தது. ஜனாதிபதி எந்த கட்சியை சார்ந்தவராக உள்ளாரோ அரசாங்கமும் அந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.
புதுவருட பிறப்பு நிறைடைந்ததும் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும். ஏப்ரல் 23ஆம் திகதிக்கு பிறகு பொதுத்தேர்தல் இடம் பெறுவதற்கான சாத்தியம் காணப்படுகினறது. தவறுகளை திருத்திக் கொண்டு சிறந்த அரசாங்கத்தை அமைத்து சிறந்த நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

