பழியுணர்வில் சிலர் நாட்டைச் சீரழிக்கின்றார்களாம்-மைத்திரி (காணொளி)

328 0

presidentநாட்டில் சிலர் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் புகழ்பூத்த சமூக சேவையாளரான சர்வோதய இயக்கத்தின் நிறுவுனர் கலாநிதி ஏ.ரி.ஆரியரத்னவின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ராவத்தாவத்த, மொரட்டுவ சர்வோதய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கமும் ஐக்கியமும், நற்பண்பும், ஒற்றுமையும் இன்றியமையாதவை என்று கூறினார்.

இங்க உரையாற்றிய ஜனாதிபதி,

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் செயற்பாடுகளை சிலர் புரிந்து கொண்டிருந்தாலும் அதனைப் புரிந்துகொள்ள முடியாத சிலர் நாட்டினுள் பழியுணர்வையும் குரோதத்தையும் விதைத்து நாட்டை சீரழிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஒழுக்கமும் ஐக்கியமும், நற்பண்பும், ஒற்றுமையும் இன்றியமையாதவை.

நாட்டினதும் மக்களினதும் நலன்களுக்காகவே எப்போதும் அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும்.

நல்லிணக்கம் எனும் சொற்பதத்தை பெரும்பாலானோர் கேலியாக்கி விமர்சித்த போதிலும் அந்த சொற்பதம் யதார்த்தமாவதிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்மாதிரியாக செயற்பட்ட ஏ.ரி.ஆரியரத்னவினது சமூகப்பணியை ஜனாதிபதி பாராட்டியதுடன் அவரது 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விசேட நினைவு பரிசு ஒன்றினையும் இதன்போது வழங்கினார்.

மெகவர-ஹரசர எனும் பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மெகவர-ஹரசர சஞ்சிகையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏ.ரி.ஆரியரத்னவால் ஜனாதிபதிக்கும் நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான ராஜித சேனாரட்ன, தலதா அத்துக்கோரள, ஜோன் செனவிரத்ன, காமினி ஜயவிக்கிரம பெரேரா, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பிர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.