எலியட்ஸ் பீச்சில் கடத்தப்பட்ட குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு

333 0

பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் உறங்கிய 8 மாத கைக்குழந்தையை கடத்திய கும்பல் ரூ.2.25 லட்சத்துக்கு விற்றது. குழந்தையை 24 மணி நேரத்தில் மீட்ட போலீஸார் அனைவரையும் கைது செய்தனர். ஆரம்பம் முதல் குழந்தையை வாங்கியவர் வீடுவரை 3 வது கண்ணான சிசிடிவி கேமரா உதவியால் சாதிக்க முடிந்தது.

காணாமல்போன குழந்தை பதறிய தாய்

கடந்த 28- ம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கு சாஸ்திரி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச் ஸ்கேட்டிங் மைதானத்தில் கும்பகோணத்தை சேர்ந்த பாட்சா(26) என்பவரின் மனைவி சினேகா (22) தனது எட்டு மாத பெண் கைக்குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது முன்பின் தெரியாத நபர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.

உடனடி செயலில் இறங்கிய போலீஸார்

 

இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாயார் சினேகா கொடுத்த புகாரின் பேரில் சாஸ்திரிநகர் போலீசார் குழந்தையை காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையை கண்டுபிடிக்க அடையார் உதவி ஆணையர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்ட நான்கு படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிப்பதிவில் 3 பெண்கள் ஒரு ஆண் சம்பவம் நடந்த இடத்திற்கு வருவதும், பின்னர் அங்குள்ள நடைமேடையில் அமர்வதும், அவர்களில் ஒரு பெண் அங்கே உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து கைக்குழந்தையை தூக்கி வருவதும், பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து ஆட்டோ பிடித்துச் செல்வதும் தெரிந்தது.

விடாமல் துரத்திய மூன்றாவது கண்

ஆட்டோ செல்லும் பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சேகரித்து ஆய்வு செய்தனர் அது ஒவ்வொரு பகுதியாகச் சென்று படேல் சாலை வழியாக காந்தி மண்டபம், ராஜ்பவன் வழியாகச் சென்று சின்னமலையில் அவர்கள் குழந்தையுடன் இறங்குவது தெரிந்தது. அங்கு மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் நிற்பதும் அவருடன் பேசிய பின்னர் அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் ஏறுவது தெரிந்தது.

பைக்கில் வந்த நபர் வழிகாட்ட அந்த ஆட்டோ அவர் பின்னால் செல்ல அவர்கள் செல்லும் பாதையை வழியெங்கும் உள்ள சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து போலீஸார் ஆய்வு செய்துக்கொண்டேச் செல்ல அது சைதாப்பேட்டையின் உள்ளே புகுந்து நெசப்பாக்கம் வரை செல்வது தெரிந்தது.

குற்றவாளி வீடுவரை காட்டிக்கொடுத்த சிசிடிவி

அங்குள்ள வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது ஆட்டோ ஒரு முட்டுச் சந்திற்குள் செல்வது தெரிந்தது. இதற்குமேல் அவர்கள் செல்ல வழி இல்லை என போலீஸார் தெரிந்துக்கொண்டனர். பின்னர் பைக்கில் வந்தவர் புகைப்படத்தை சிசிடிவியிலிருந்து எடுத்த போலீசார் அங்குள்ளவர்களிடம் விசாரிக்க இவர் பெயர் மணிகண்டன் என்று வீட்டைக்காட்டியுள்ளனர். ஆனால் வீட்டில் யாரும் இல்லை.

சிறிது நேரம் கழித்து அங்கு வந்த மணிகண்டனை போலீஸார் மடக்கிப்பிடித்து விசாரிக்க முதலில் ஓஎல்எக்ஸ் மூலம் குழந்தை தத்து கொடுப்பவர்களிடம் வாங்கினேன் என்று மழுப்பியவர் பின்னர் கவனிப்பு நடந்தவுடன் உண்மையை ஒப்புக்கொண்டார்.

சிக்கிய குற்றவாளிகள்

குழந்தையைக் கடத்திய காரைக்குடியைச் சேர்ந்த மேரி (35) அவரது மகன் ரூபன் ( 19) சைதாப்பேட்டை அபித் காலனியில் வசிக்கும் திருப்பதி அம்மாள் (42) அவரது மகள் பாலவெங்கம்மாள் (18) ஆகியோரிடமிருந்து ரூ.2 லட்சம் கொடுத்து 8 மாத பெண் குழந்தையை வாங்கினேன் என்று கூறியுள்ளார்.

குழந்தை எங்கே என்று கேட்டபோது தனது சகோதரிக்காகத்தான் வாங்கினேன் அவரது வீட்டில் உள்ளது என்றுக் கூற அவர் வீட்டுக்கு மணி கண்டனை அழைத்துச் சென்ற போலீஸார் முதலில் குழந்தையை மீட்டனர். குழந்தை உடல் நிலை பரிசோதனைக்காக சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.