தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றும் கூட்டணியாக களமிறங்கி பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தை கைப்பற்றுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதித் தேர்தலின்போது நுவரெலியா மாவட்டத்தில் நாம் வெற்றிபெற்றோம். எமது மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களித்தார்கள். எனவே, பொதுத்தேர்தலிலும் சஜித் தலைமையில் அம்மாவட்டத்தில் எமது வெற்றிநடை தொடரும்.
புதிய அரசாங்கம் பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. இதன்மூலம் அரசாங்கத்தின் மூகமூடி கலைந்துள்ளது.
சாய்ந்தமருது நகரசபையை உருவாக்குவதற்கு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுவிட்டு, அதனை மீளப்பெற்றனர். எனவே ஆயிரம் ரூபாய்க்கும் இந்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது.
ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசாங்கம்தான் உறுதியளித்தது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவேண்டும். கம்பனிகளை காரணம் காட்டிக்கொண்டு இருக்க முடியாது. அடிப்படை சம்பளமாக அல்லாது, மொத்த சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்கினால் அதனை மக்கள் திருப்தியுடன் ஏற்கமாட்டார்கள்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் எவ்வித முரண்பாடும் இல்லை. நேற்றுகூட நாங்கள் மூவரும் கூட்டாகவே பத்திரிக்கையாளர்களை சந்தித்தோம். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்களின் விபரத்தை அறிவிப்போம்” என மேலும் தெரிவித்தார்.

