என்னை ஹரி என்று அழைக்கவும்!

209 0

சசெக்ஸ் இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தனது கடைசி உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார்.

நேற்றிரவு லண்டன், கிங்ஸ் குரொஸ் ரெயில் நிலையத்திலிருந்து எல்என்இஆர் (LNER) ரெயிலில் எடின்பேர்க்கிற்குப் பயணித்தபோது ஸ்கொட்லான்ட் யார்ட் பொலிஸார் அவருக்குப் பாதுகாப்பு வழங்கினர்.

எடின்பேர்க்கிற்குச் சென்ற அவர் தனது அரச பட்டத்தைக் கைவிட்டதுடன் தன்னை ஹரி என்று மாத்திரமே அழைக்கவும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை எடின்பேர்க்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா நிறுவனத்தைத் தொடங்கிவைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எடின்பேர்க் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தத் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய ஹரி; ஸ்கொட்லாந்தில் உள்ள இந்தப் பயண நிறுவனம் சுற்றுச்சூழலைப் பசுமையாக்குவதில் முன்னணியில் இருப்பதாகக் கூறியதுடன் பிரித்தானியா உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்தார்.

ஜனவரி நடுப்பகுதியில் பக்கிங்கம் அரண்மனையில் நடந்த ரக்பி உலகக்கிண்ண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளவரசர் ஹரி அதன் பின்னர் அவர் கலந்து கொண்ட உத்தியோகபூர்வ நிகழ்வு இதுவாகும்.

ஹரியுடன் மேகனும் மகன் ஆர்ச்சியும் பிரித்தானியாவுக்குத் திரும்பி வந்தார்களா என்பது குறித்து, தெளிவாகத் தெரியவில்லை.

ஹரி மற்றும் மேகன் மார்ச் 31 முதல் தமது அரச கடமைகளில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்க்கைக்குச் செல்லவுள்ளனர்.

அவர்களது விருப்பத்திற்கு ராணி சம்மதம் தெரிவித்ததையடுத்து அவர்கள் தமது மகன் ஆர்ச்சியுடன் கனடாவில் குடியேறியுள்ளனர்.