ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் ஆர்ப்பாட்டம்

416 0

மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் தரம் 5 மாணவர்களுக்கு கற்பிக்க தகுதியான ஆசிரியரை நியமிக்ககோரி பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை, பாடசாலை வளாகத்தின் முன்றலில் சுமார் 3 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகை தந்து  தங்களுக்கான  தீர்வை கூறவேண்டும் எனக்கூறி, பெற்றோர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன் ‘எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள்’, ‘வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்’, ‘எமது மாணவச் செல்வங்களை பறக்கணிக்காதே! தரம் 5 மாணவர்களுக்கு ஆசிரியர் தேவை’ என எழுதப்பட்ட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்ட இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வருகை தந்து ஆர்பாட்டடக்ககாரர்களுடன் தங்கள் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.மேலும் ஆர்பாட்டக்காரர்களினால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்துடன் வலயக்கல்வி அலுவகத்திருந்து அதிகாரிகள் வருகை தந்திருந்திருந்ததுடன் அதிகாரிகளுடன் ஆர்பாட்டக்காரர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் பாடசாலை அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், அடுத்த வாரம் இப்பாடசாலைக்கான தரம் 5 மாணவர்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர் நியமிக்கப்படுவார் என வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள் வாக்குறுதியளித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.