நூதன மோசடிக் குழுவிடம் சிக்கிக்கொண்ட கிராம சேவகர்கள்- யாழில் இடம்பெற்ற சம்பவம்!

250 0

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடிக்காரர்கள் 40 ஆயிரம் ரூபாய் வரையில் பண மோசடி செய்துள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவையாளர்கள் பலருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டவர்கள், தாம் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் என அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், “உங்கள் கிராம சேவையாளர் பிரிவுகளில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க நாம் உங்கள் கிராமத்திற்கு வரவுள்ளோம். அதற்கான செலவீன பணத்தினை ‘ஈசி காஷ்’ (eZcash) மூலம் அனுப்பி வையுங்கள்” எனக் கோரியுள்ளனர்.

இதையடுத்து ஒரு கிராம சேவையாளர் 14 ஆயிரம் ரூபாயையும் இன்னொரு சேவையாளர் 25 ஆயிரம் ரூபாயையும் ‘ஈசி காஷ்’ மூலம் அனுப்பியுள்ளனர். ஏனைய கிராம சேவையாளர்கள் சுதாகரித்துக்கொண்டு ஏமாறாமல் தப்பிக்கொண்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏமாற்றப்பட்ட கிராம சேவையாளர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யவுள்ளனர்.