எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தை

339 0

சென்னை எழும்பூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு கிலோ எடையில் பிறந்த பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து டாக்டர்கள் காப்பாற்றினர்.ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ‌ஷர்வாணி (24) என்ற பெண்ணுக்கு திருமணமான 7 மாதத்தில் வயிற்று வலி ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் கர்ப்ப பையின் பனிக்குடத்தில் போதிய அளவு நீர் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க முடிவு செய்தனர். கடந்த மாதம் 13-ந்தேதி ‌ஷர்வாணிக்கு ஆபரே‌ஷன் செய்து குழந்தையை உயிருடன் எடுத்தனர்.

குழந்தையின் எடை ஒரு கிலோ 100 கிராம் அளவில் இருந்தது. எடை குறைவாக குழந்தை இருந்ததால் மற்ற உறுப்புகள் போதிய அளவில் வளர்ச்சி அடையாமல் இருந்தன.

ஒரு மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தை இயல்பு நிலையில் சுவாசிக்க தொடங்கியது. மேலும் குழந்தையின் எடையும் 300 கிராம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் விஜயா கூறியதாவது:-

இந்த குழந்தை பிறந்த போது எடை குறைவாக காணப்பட்டது. ஒரு மாதம் குழந்தை தீவிர கண்காணிப்பில் இருந்தது. தற்போது குழந்தையின் எடை ஒரு கிலோ 400 கிராமாக அதிகரித்தது. குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பியதால் தாயுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் குறை பிரசவம் மற்றும் குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதி போதிய அளவில் உள்ளன. கடந்த ஒரு ஆண்டில் எடை குறைந்த 23 குழந்தைகள் உயிருடன் பாதுகாக்கப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.