சென்னை துறைமுகத்துக்கு வந்த சீன கப்பலில் பூனை இருந்ததால் பரபரப்பு!

218 0

சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை வந்திருப்பது கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அனைத்து நாடுகளுமே உஷாராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களும், துறைமுகங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.

காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையுடன் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்திலும் அரசு ஆஸ்பத்திரிகளில் தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ள சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை வந்திருப்பதும் கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கப்பல் துறை சார்பில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் சீனாவில் இருப்பவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையொட்டி நேபாளம், பூடான், வங்காளதேசம், மியான்மர், எல்லைகளிலும் இந்திய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இப்படி மனிதர்களை அதிகாரிகள் கண்காணித்து வந்த நிலையில்தான் சத்தமில்லாமல் சீன பூனை சரக்கு கப்பலில் ஊடுருவி உள்ளது.

சீன கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்ததும் அதில் இருந்த கண்டெய்னர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பொம்மைகள் நிரப்பப்பட்டிருந்த கண்டெய்னரில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து பூனைக்கு மருத்துவ பரிசோதனை செய்து கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்தனர். பூனையை வெளியில் எங்கும் விடாமல் கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று மாலையில் துறைமுகங்களில் கண்டெய்னர்கள் நடுவில் 3 சிங்கங்கள் நடமாடுவது போலவும், சிங்கம் கடித்து குதறியதில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடுவது போலவும் புகைப்படங்கள் வெளியானது.
துறைமுகத்தில் சிங்கம் நடமாடுவதாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம்.

அதனுடன் நெல்லை தமிழில் வாலிபர் பேசும் ஆடியோவும் வெளியாகி பீதியை ஏற்படுத்தி உள்ளது. வாலிபரின் பேச்சு வருமாறு:-

போட்டோவில் உள்ள 3 சிங்கங்களையும் பார்த்து இருப்பீங்க. சென்னை காமராஜர் துறைமுகத்தில் தான் இந்த சிங்கங்கள் இருக்கு. காட்டில் இருந்து வந்ததா? இல்லை யாரும் கண்டெய்னரில் கொண்டு வந்து இறக்கி விட்டு விட்டு போயிட்டாங்களான்னு தெரியல…

3 சிங்கம் சுத்திகிட்டு இருக்கு. நேற்று லோடு ஏத்தும்போது பார்த்தேன். இதனை முடிஞ்ச அளவுக்கு எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

டிரைவர்கள் கவனமாக இருங்க. இரவு நேரத்தில் வண்டிய விட்டு எக்காரணத்தை கொண்டும் கீழே இறங்காதீங்க.

இவ்வாறு அந்த வாலிபரின் பேச்சு முடிந்தது.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளார். அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது