உரிமைகளை பறிக்க நினைத்தால் ஒன்று திரண்டு முறியடிப்போம்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

211 0

ஜனநாயகத்தில், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், போராடும் உரிமைகளை பறிக்கிற வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் இதை எதிர்கொள்வதற்கு மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் திரண்டு முறியடிப்பார்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிராக, தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுபான்மை சமுதாயத்தினர் நேற்று அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் மாலை 5 மணிக்கு மேல் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் வலியுறுத்தினார்கள். மேலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்கிற வகையில் திடீரென காவல்துறையினர் தடியடி தாக்குதலை நடத்தினார்கள்.

 

எந்த அவசியமோ, காரணமோ இல்லாமல் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக பெண்கள் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகம் முழுவதும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவதை ஒடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அதிமுக அரசு காவல்துறையை ஏவிவிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தகைய போராட்டங்களை ஒடுக்காவிட்டால் மத்திய பா.ஜ.க. அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அதிமுக அரசு காவல்துறையை ஏவி, இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஜனநாயகத்தில், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கும், போராடுவதற்கும் உரிமை இருக்கிறது. அத்தகைய உரிமைகளை பறிக்கிற வகையில் அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் இதை எதிர்கொள்வதற்கு மதசார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள் என எச்சரிக்க விரும்புகிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.