சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பரபரப்பு

228 0

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின் இடையில், முதல்வர், துணை முதல்வரிடம் வேலூர் கிழக்கு, வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர்கள் மீது நிர்வாகிகள் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக வளர்ச்சிப் பணிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, அதிமுக அலுவலகத்தில், ஏற்கெனவே கடந்த பிப்.10 மற்றும் 11-ம் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் முதல், நகர செயலாளர்கள் வரை பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் பங்கேற்று கட்சியில் உள்ள பிரச்சினைகள், தொகுதியில் வெற்றி தோல்வி குறித்து கருத்துகளை தெரிவித்தனர். குறிப்பாக, நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டும், தோல்வியடைந்த பகுதிகளில் அதற்கான காரணங்களை ஆய்வு செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டது.

முதல்வர் பங்கேற்பு

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத்தால், பிப்.12, 13-ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பிப்.13-ம்தேதிக்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று பிற்பகல் 12.45 மணிக்கு முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகிய இருவரும், அதிமுக தலைமை அலுவ லகம் வந்தனர்.

நெல்லை மாநகர், புறநகர், வேலூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, மேற்கு, மத்திய ஆகிய மாவட்டங்களுக்கான கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் தனியாகவும், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் நிர்வாகிகள் சேர்ந்தும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மீது ஏற்கெனவே வந்துள்ளபுகார்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டது. அதன்பின், நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது குறித்து ஒருங்கிணைப்பாளர் கள் ஆலோசனை வழங்கினர்.

பிற்பகல் கூட்டம் முடிந்து 3.45 மணிக்கு முதல்வர், துணை முதல்வர் இருவரும் புறப்பட்ட நிலையில், அவ்வை சண்முகம் சாலையில் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் மனுக்களுடன் காத்திருந்தனர். அவர்கள் முதல்வர், துணை முதல்வரை சந்தித்து மனுக்களை அளித்தனர். அம்மனுக்களில், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான ரவியை மாற்ற வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, மாலை 6.10 மணிக்கு மீண்டும் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் வந்தனர். மாலையில் விழுப்புரம் வடக்கு, தெற்குமற்றும் சென்னையில் வடசென்னை வடக்கு கிழக்கு, மேற்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தெற்கு மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் வந்தபோது, அலுவலகத்துக்குள் கூடியிருந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வெங்க டேஷ்பாபுவை மாற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். அதன்பின், அவர்களிடம் நிர்வாகிகள் பேசி சமாதானப்படுத்தினர். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கான கூட்டம் நடைபெறுகிறது.