கொரோனா அதிகம் பரவியுள்ள மாகாணத்திற்கு விரைந்த 25 ஆயிரம் டாக்டர்கள்

46 0

சீனாவில் கொரோனா வைரஸ் அதிக பாதிப்பை ஏற்பத்தியுள்ள ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரம் டாக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹூபேய் மாகாண தலைநகர் வுகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.  இதன்பின்னர் பீஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது.
சீனா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 25-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 1,662 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றனர். வைரஸ் அதிகம் பரவியுள்ள ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவந்த 6 டாக்டர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஆயிரத்து 700 டாக்டர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், முகமூடிகள் என வைரஸ் பரவுவதை தடுக்க தேவைப்படும் பொருட்கள் போதிய அளவில் இல்லாதது, ஓய்வு இல்லாத வேலை உள்ளிட காரணங்களால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களும் மருத்துவ ஊழியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் ஹூபேய் மாகாணத்திற்கு கூடுதலாக 25 ஆயிரத்து 633 டாக்டர்கள் சென்றுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களில் 20 ஆயிரத்து 374 டாக்டர்கள் கொரோனாவால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு சென்றுள்ளனர்.
இந்த நடவடிக்கையால் வேலைப்பளுவால் அவதிபட்டுவரும் டாக்டர்களின் பணிச்சுமை குறைவது மட்டுமல்லாமல் வைரஸ் பரவுவது தடுக்கப்பட்டு உயிரிழப்புகள் குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.