மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனித புதை குழி!

442 0

மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டமை குறித்து மன்னார் பொலிஸார் மன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரனை எதிர்வரும் 25 ஆம் திகதி மன்றில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.டினேஸன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கின் போது அரச சட்ட வைத்திய அதிகாரி மற்றும் அவர்கள் குழு சார்பாக ஆஜராகிய அரச சட்டத்தரணி, பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தகாத வார்த்தைப் பிரயோகத்தினை பயன்படுத்தியுள்ளார்.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜராகிய அனைத்து சட்டத்தரணிகளும், மன்னார் சட்டத்தரணிகளும் குறித்த அரச சட்டத்தரணிக்கு எதிராகவும் குறித்த வார்தை பிரயோகத்திற்கு மன்னிப்பு கோருமாறும் தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து வெளியேறினர்.

அதன் பின்னர் குறித்த வார்தை பிரயோககத்திற்கு அரச தரப்பு சட்டத்தரணி மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மீண்டும் மன்னார் ‘சதொச’ மனித புதை குழி வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் உள்ள சட்டத்தரணிகள் வெளி நடப்பு செய்த நிலையில்,மீண்டும் மொழி பெயர்ப்பாளர் இல்லாத காரணத்தினால் மதியம் 1.15 மணியளவில் குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் குறித்த வழக்கு மதியம் 1.45 மணியளவில் மீளவும் அழைக்கப்பட்டு மாலை 5 மணிவரை விசாரணைகள் இடம் பெற்றது.

இதன் போது அரச சட்டத்தரணி குறித்த வழக்கின் ஆரம்ப விடையம் முதல் அனைத்து விடையங்களையும் மன்றில் முன்னிலைப் படுத்தி இருந்தார்.

இதன் போது அரச சட்டத்தரணி ;காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாகவே மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு எவ்வித தகுதியும் இல்லை என வாதிட்டு தனது ஆட்சேபனையை தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த ஒரு சட்டத்தரணியும் முன்னிலையாக முடியாது, ஆனால் காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகம் சார்பாக சட்டத்தரணி ஆஜராக முடியும் என்ற விவாதத்தை மன்றில் முன் வைத்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமானது அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டு தமிழ் மக்களின் மிக எதிர்ப்புக்கு மத்தியில் இயங்கி வரும் ஒரு அலுவலகமாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் காணப்படுகின்றது.

மற்றைய தரப்பில் அரச தரப்பாக அரசாங்கத்திற்கு சார்பாக தோண்றுகின்ற அரச சட்டத்தரணி குறித்த வழக்கில் முன்னிலை யாகியுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் மூன்றாம் நபராக அதாவது பாதிக்கப்பட்ட நபர் சார்பாக இன்னும் ஒருவர் மன்றில் தோன்றுவதை அரச சட்டத்தரணி கடுமையாக மன்றில் எச்சரித்திருந்தார்.

மேலும் மன்னார் ‘சதொசா’ வளாகத்தில் அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மன்னார் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த அறையின் ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதோடு, கதவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறித்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கைரேகை நிபுணர்களின் விசேட நடவடிக்கைக்காக குறித்த வழக்கு பிரிதொரு வழக்காக மன்னார் பொலிஸாரினால் மன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரச சட்டத்தரணியினால் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்திற்கு மறுமொழி வழங்கும் வகையில் இவ் வழக்கானது எதிர் வரும் 25 ஆம் திகதியும், ‘சசொதா’ அகழ்வின் போது கண்டு எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் காணப்படும் தொல் பொருட்களை பிரித்து எடுப்பதற்கான இவ் வழக்கு விசாரனை எதிர்வரும் மார்ச் மாதம் 16 ஆம்,17 ஆம் திகதிகளில் அழைக்கப்படுவதற்காக இவ் வழக்கு தவணையிடப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான எஸ்.டினேஸன் மேலும் தெரிவித்தார்.