தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

248 0

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 1,000 பேருக்கு மேல் பலியாகி உள்ளனர். சுமார் 24 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் 42,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில், பாதிக்கப்பட்ட மாணவி குணமடைந்து விட்டதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் எனவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டு, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

இந்நிலையில், இது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் இன்று (பிப்.11) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர் காண்காணிப்பில் உள்ளன. மாநில எல்லைகள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ரத்த மாதிரி எடுக்கப்பட்ட 42 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.