அமைதி வழிக்கு திரும்பிய போடோ பயங்கரவாதிகள் அரசியல் கட்சி தொடங்க திட்டம்

258 0

அசாமில் அமைதி வழிக்கு திரும்பிய போடோ பயங்கரவாதிகள் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றில் போடோ பயங்கரவாதிகள் பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டு வந்தனர்.அவர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் மத்திய மாநில அரசுகள் ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய போதிலும் அவர்கள் அமைதி வழிக்கு திரும்பவில்லை.

இந்த நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா புதிய திட்டங்களுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்கு வெற்றி கிடைத்தது.

இதையடுத்து இந்த பயங்கரவாத அமைப்புகள் சில போராட்டத்தை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப சம்மதித்தனர். இதையடுத்து மத்திய அரசுக்கும், போடோ பயங்கரவாத அமைப்புக்கும் இடையே பிரதமர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இதைத்தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகள் அரசியல் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. இதுசம்பந்தமாக ஆலோசனை கூட்டம் இன்னும் ஒன்றிரண்டு நாளில் நடைபெற உள்ளது.

அமைதி ஒப்பந்தத்தில் 4 அமைப்புகள் கையெழுத்திட்டன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரே கட்சியை தொடங்குவதா? அல்லது தனித்தனியாக அந்த அமைப்புகள் சார்பில் கட்சி தொடங்குவதா? என்று முடிவு எடுக்கப்பட உள்ளது.

இதற்கிடையே சில பயங்கரவாத அமைப்புகள் ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து போராடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.