விமல் வீரவன்ச அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்- ரவிகரன்

252 0

விமல் வீரவன்ச அங்கோடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டியவர் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் குறித்த அரசாங்கம் தக்க பதிலை வழங்கவே வேண்டும் என வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

“காணாமல் ஆக்கப்பட்டோர்களை மண்ணுக்குள்ளிருந்துதான் தோண்டி எடுக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் விடுதலைப் புலிகளே” என்பதான கருத்தை அண்மையில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

அவரின் இக்கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்து கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர்  தெரிவிக்கையில், “அமைச்சர் விமல் வீரவம்ச, அண்மையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஒரு முரண்பட்ட கருத்தினைத் தெரிவித்திருந்தார்.

வட, கிழக்கெங்கும் ஆயிரக் கணக்கான நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்படடோரது உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பொருத்தமற்ற கருத்தைத் தெரிவித்துள்ள அமைச்சர் விமல் வீரவம்சவினை அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறாக அங்கோடை வைத்தியசாலையில் சேர்ப்பிகப்பட வேண்டியவர்களை, மக்களின் நலனைக் கவனிக்க இந்த அரசாங்கம் அமைச்சுப் பதவி வழங்கியிருக்கிறது. இவ்வாறானவர்களை அரசாங்கம் அமைச்சராக்குவது எந்தவகையில் பொருத்தமாக அமையும் என்பதையும் கேட்டுக்கெள்ள விரும்புகின்றேன்.

ஏனெனில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போரட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னரான நிலையில்தான், ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளைத் தாய்மாரும், தங்களுடைய கணவன்மாரை மனைவிமாரும் வட்டுவாகல், ஓமந்தை போன்ற பகுதிகளிலும், ஒவ்வொரு நலன்புரி நிலையங்களிலும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அல்லது இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவ்விடயங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்பு இடம்பெற்றிருக்கக்கூடிய விடயங்களாகும்.

இந்நிலையில் விமல் வீரவம்ச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தினைத் தோண்டிப் பாருங்கள் என்று கூறியதுடன், விடுதலைப் புலிகள்தான் அதற்கு காரணம் எனவும் சொல்லியுள்ளார். இது எந்தவகையில் சாத்தியமாகும்.

நிச்சயமாக இந்த மக்களுக்கு ஏற்பட்ட நிலைமைகளுக்குப் பொறுப்புக் கூறவேண்டியவர்களாக இப்போதைய அரசாங்கம்தான் இருக்கின்றது. சட்டத்தின் ஆட்சி, அல்லது பொறுப்புக்கூறல் என்ற விடயங்களில் ஏமாற்றுகின்ற வேலையாகத்தான் விமல் வீரவம்சவின் இக்கருத்து காணப்படுகின்றது.

ஒரு சரியான அரசாங்கமாக இருப்பின், இவ்வாறாக அங்கோடை வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டிய நிலையிலுள்ள அமைச்சர்களை உடனடியாக பதவியில் இருந்து அகற்ற வேண்டும். இந்தப் பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் என்றைக்கும் தப்பித்துக்கொள்ள முடியாது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்குமான உரிய பதிலை அரசாங்கம் சொல்லவே வேண்டும் என்பதை திடமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.