தாதியர்களிற்கு பதில் ரோபோக்கள்: சீனாவின் முயற்சி

58 0

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்குள்ள மருத்துவமனைகளில் தாதியர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை அங்கு 811 பேர் பலியாகியுள்ளனர். 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் தாக்குதலால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க இடம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஏற்கனவே 1,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உகான் நகரில் 10 நாட்களுக்குள் சீன அரசு கட்டி முடித்து உள்ளது. மேலும், மருத்துவமனைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் விடுப்பின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், குடும்பத்தினரை பிரிந்து பணியாற்றும் அவர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதனால் அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மருத்துவமனைகளில் தாதியர்களுக்கு பதில் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு மருந்து, உணவுகளை தாதியர்கள் வழங்குவதற்கு பதிலாக ரோபோக்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.