எரோல் வன பாதுகாப்பு பகுதியில் பாரிய தீப்பரவல்

286 0

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் எரோல் வன பாதுகாப்பு பகுதியில் நேற்று (08) திகதி இரவு 8.00 மணியளவில் இனந்தெரியாதவர்கள் வைக்கப்பட்ட தீக்காரணமாக சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீக்கிரையாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மலையகப் பகுதியில் தற்போது வரட்சியான காலநிலை நிலவுவதனாலும் அதிக காற்று காரணமாகவும் தீ மிக வேகமாக பரவியுள்ளன.

இதனால் இந்த காட்டுப்பகுதில் உள்ள நீரூற்றுக்கள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு வாழும் விலங்குகள், சிறிய உயிரினங்கள் இறந்து போய் இருக்கலாம என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தீ காரணமாக அரியவகை மருந்து பொருட்கள் எமது நாட்டுக்கே உரிதான தாவரங்கள் உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ மிருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கையில் வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த ஹட்டன் கொமர்சல் ஆகிய பகுதிகளுக்கு குடி நீர் பெறுவதனால் எதிர்காலத்தில் பாரிய குடி நீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கும் வாய்ப்பு காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறான போதிலும் காடுகளுக்கு தீ வைப்பதனால் பாரிய சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதனாலும், இவ்வாறு தீ வைப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.