தமிழ்த் தேசிய அரசியலுக்குச் சோதனை!

344 0

விஞ்ஞானத்தில் மாத்திரமல்ல, உலகின் அனைத்து விடயங்களிலும் சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.   

அதேபோன்றுதான், அரசியலிலும் சோதனைகள், சாதனைகள், வெற்றிகள், தோல்விகள் சாதாரணமானவை; இவை தொடர்ந்தும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவை அரசியலில் வெறுமனே, தேர்தல்களுக்கு மட்டுமானவை இல்லை; ஆனால், இப்போதைய காலச்சூழலில் இந்தச் சோதனை முயற்சிகள் தேர்தல்கானவையாகவே மாறியிருக்கின்றன. இதில் நகைச்சுவை என்னவென்றால், இலங்கையில் தமிழர் அரசியல் என்பது, தமிழ்த் தேசியத்துக்கு மாத்திரமே சொந்தமானது என, எல்லோரும் நினைக்கிறார்கள்.

இலங்கையின்  அரசியல் கள நிலைவரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவவொரு முகம்; ஒரு பின்புலம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சிலருக்குப் பல பின்புலங்கள் இருக்கும்; பல முகங்களும் இருக்கும். சில பெரிதாகவும் தெளிவாகவும் தெரியும்; சில வெளியில் தெரிவதே கிடையாது.  இப்போது மேடையேறிக் கொண்டிருக்கும் அரசியல் களரியிலும் இதுதான்  நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் அரசியல்வாதிகளைப்  பொறுத்தவரையில், குளம்  குழம்பியிருக்கிறது; குட்டையில் மீன்களைப் பிடித்துவிடலாம் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கினறது.

ஆனால், வெளியில் இருந்து பார்க்கும்போதுதான், குளம் குளம்பியிருப்பதுபோல் தெரிகிறது; ஆனால், உண்மையில் குளம் குழப்பி இருக்கவில்லை என்பதற்கு கோட்டாபய ராஜபக்‌ஷவை ஜனாதிபதியாக்கிய தேர்தலை, ஆதாரமாகக் கொள்ள முடியும்.

அதேபோல், நான்கு வருடங்களுக்கு முந்திய நாடாளுமன்றத் தேர்தலையும் பல விடயங்களுக்கு உதாரணமாகக் கொள்ளமுடியும். இருந்தாலும் எல்லாவற்றுக்குமல்ல; நமக்கேன் வீண் வேலை; சொல்லவந்த விடயத்துக்கு வருகிறேன்.

இந்தத் தமிழ்த் தேசியத்தை யாரும் கைவிடுவதாக இல்லை. பொதுவாக, தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், கட்சிகள் புதிதாக உருவாகுவது; பெயர் மாறுவது; காட்சிகள் மாறுவது ஒன்றும் புதிதில்லை.

வடக்கில், இறுதியாக உதயமான கட்சி, சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசிய கட்சி ஆகும். கிழக்கில், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் உண்டான குழப்பத்தில், தமிழர் முற்போக்கு முன்னணி என்ற ஒரு புதிய கட்சி உருவாகியிருக்கிறது.

புதிய தலைமுறை, தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து, மாற்றுத் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்து கொண்டிருந்த  சூழலில், பழையவர்கள், தோற்றுப்போனவர்கள் ஆகியோர் இணைந்து, கட்சிகளை உருவாக்கிக் தேர்தல்களில் களமிறங்க இருக்கிறார்கள்.

தங்களைத் தாங்களே ஆளுமையற்றவர்களாகப் பறைசாற்றிக் கொண்டவர்களால், தாங்கள் நினைப்பதை, தமிழ்த் தேசியத்தின் அபிலாசைகளை, உணர்வுகளை எவ்வாறு  நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதுதான் இங்குள்ள முக்கிய கேள்வி ஆகும்.

ஆயுதப் போராட்டத்தின் ஓய்வுடன்,  2009இல் தமிழர் விடுதலைப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணிக் கொள்ள முடியாது; என்றாலும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிங்கள மேலாதிக்கக் கட்டமைப்புக்குள், தமிழர்களின் தேசியம் படும்பாடு பெரும்பாடாகத்தான் இருக்கிறது என்பது உண்மைதான். இருந்தாலும், தமிழ்த் தேசியத்துக்கு பிரச்சினை என்று வந்துவிட்டால், தமிழர்கள் விட்டுக் கொடுத்து, சும்மா இருந்துவிட மாட்டார்கள் என்பது மாத்திரமே உறுதியானது. மார்ச் மாதத்தின் பின்னர் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், இதற்கான பதிலைச் சொல்லிவிடும்.

கிழக்கைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பைத்தான் பெரும்பாலும் நம்பிக்கையுடன் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கம். அதேபோன்று, இரா. சம்பந்தனை வைத்துக் கொண்டிருக்கும்  திருகோணமலை. இவை இரண்டுக்குள்ளும் சிக்கிக் கொண்டிருப்பது அம்பாறை. இதைத்தான் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா இலக்கு வைக்கிறார்.

அனைத்துக் கட்சிகளுமே, தேர்தலுக்கு ஆள்களைப் பிடிப்பதில் மும்முரமாக இருக்கின்றன. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், தமிழர்களில் பலமானவர்களை, இணைத்து, அபிவிருத்திகளைச் செய்வதுபோல்க் காட்டி, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றதொரு நிலைப்பாட்டுடன் முனைப்பு பெற்றிருக்கிறது.

அடுத்து, பசில் ராஜபக்‌ஷ, மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் பலத்துடன் இருக்கின்ற கட்சிகளின் கூட்டுச் செயற்பாடுகள் தமிழர் தேசிய அரசியலுக்கு எதிர் நடவடிக்கைகளில் முயன்று கொண்டிருக்கின்றது.

மற்றைய தரப்பு, ஐக்கிய தேசியக் கட்சி; இதனுடன் ஐக்கிய தேசிய முன்னணியாக இணைந்திருக்கின்ற கட்சிகளின் செயற்பாடு. இவையிரண்டும் பெருந்தேசியவாதச் செயற்பாடாகப் பார்க்கப்பட்டாலும், அதேபோன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்களும் இருக்கிறார்கள். இவை தவிரவும், பலரும் தேர்தல் ஆசையில் நகர்த்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்த் தேசிய அரசியல் நகர்த்தப்பட வேண்டும் என்பதுதான் கிழக்கைப் பொறுத்த வரையில் மிகப்பெரியதொரு சிக்கலாகும்.

தமிழ்த் தேசிய அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றம் பெற்றவேளை, ஓர் இக்கட்டான கால கட்டமாகும். கிழக்கிலிருந்து முனைப்புப் பெற்ற ஒற்றுமை என்கிற விடயம், வடக்குக் கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபித்து, விரிந்து, விடுதலைப் புலிகளால் அது கட்டமைக்கப்பட்டது; இதை யாரும் மறுப்பதற்கில்லை.

2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றமானது வெறுமனே நாட்டுக்குள் நடந்ததல்ல. அதற்குச் சர்வதேசங்கள் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் மாநாடுதான் காரணம். அது போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம், அதற்கான சின்னம் எல்லாம், எடுத்த எடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.

புதிதாக ஒரு கட்சியை, அவ்வேளையில் விடுதலைப் புலிகளுக்கு உருவாக்கத் தெரியாமலுமில்லை. இருந்தாலும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது என்ற நிலைப்பாடு உருவானபோது, தந்தை செவ்வாவால் கைவிடப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியைத் தூசி தட்டி, அதன் சின்னத்தைக் கையிலெடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றாக்கப்பட்டது. அப்போதே, தனியுரிமை இல்லையென்றானதே உண்மை.

ஆயுதப் போரின் ஓய்வின் பின்னர்தான், முழுமையான அரசியல் வேலையைத் தாங்கள் செய்யத் தொடங்கியதாகச் சொல்லுகின்ற தமிழரசுக் கட்சி, அவ்வாறானால், அச்சின்னத்தை விட்டுவிட்டு, கட்சியை விட்டுவிட்டுப் புதியதொன்றைத் தேடியிருக்க வேண்டும். ஆனால், அதற்கான அங்கிகாரம் கிடைத்து விட்டது என்றவுடனே, அதனைக் கைப்பிடித்துக் கொண்டது.

ஆனால், தமிழ்த் தேசியத்தால் இறுக்கிக் கட்டப்பட்டே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்ற அடிப்படையில், 2009இல் இருந்து வழிகாட்டிகள் இல்லை என்ற நிலைமையில், முன்னணியாக நின்று வழிகாட்டியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே ஆவார்.

இந்த இடத்தில், தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்று, புரிந்து கொள்வது முக்கியமாகும். அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் முக்கியமானவராகத் திகழ்ந்த அமரர் டி.சிவராம் பல கேள்விகளைக் கேட்பார்.

‘தமிழ் தேசியம்’ என்பது ஒரு கருத்தியலா,  கருத்துகளின் தொகுப்பா, தமிழராய்த் தம்மைக் கருதுகின்ற ஒவ்வொருவரிடமும் இருக்கக்கூடிய ஒரு சமூக உள்ளுணர்வா,  தமிழ் மொழியைத் தம் தாய் மொழியாகக் கருதுகின்ற அனைவரிடமும் நாடு, மதம் எனும் பேதங்களை மேவிப் பரந்து கிடக்கின்ற ஓர் உளப்பாங்கு எனத் தமிழ்த் தேசியத்தைக் கூறலாமா, இந்த உணர்வு,  உளப்பாங்கு தமிழர் எனத் தம்மைக் கருதுகின்ற அனைவரிடமும் இன்று காணப்படுகிறதா, அன்றி இலங்கையின் வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் இன மக்களிடம் மட்டுமே ஓர் அரசியல் உந்து விசையாக உள்ளதா? இவை யாவற்றுக்கும் நாம் பதில் கண்டாக வேண்டும்.

இவற்றுக்கு பதிலைக்கண்டு கொண்டால், தமிழ்த் தேசிய அரசியல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளனவா என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிடும்; பலர் குழப்புவதற்கு முனையவும் மாட்டார்கள்.

இந்த நிலைமையில்தான், கிழக்கின் அரசியலில், ஒவ்வொருவரும் “என்னைப் பிரேரியுங்கள்; இவரை நாங்கள் வழி மொழிகிறோம்” என்றெல்லாம் கோரிக்கைகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதற்கு முன்னர், மேலுள்ள வேள்விகளுக்குப் பதிலை கண்டுபிடியுங்கள் என்பதே தமிழர்களால் விடுக்கப்படும் கோரிக்கையாக இருக்கிறது.

தமிழ்த் தேசியம் பற்றி, தமிழர்களுக்கு இருக்கின்ற புரிதலும் அதில் ஏற்பட்டு வருகின்ற குழப்பங்களும் குழப்பங்களுக்குத் தீர்வாக எட்டப்படுகின்றன தீர்மானங்களும் காலங் காலமாக வரலாறாக இருந்தே வந்துள்ளன.

இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் அடிப்படையே, ‘வடக்கு, கிழக்கு  நிர்வாக மாகாணங்கள் இணைந்த, தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய தாயக பூமி’ என்பதாகும். இது, இலங்கைத் தமிழ்த் தேசியத்தின் கேள்விக்குட்படுத்த முடியாத அம்சமாக, நம்பிக்கையாக நிலைத்து வந்துள்ளது.  அந்தவகையில், வெளிப்படையாக வேறு குழப்பங்களில் யார் ஈடுபட்டாலும் நடைமுறையில்  தாயக ஒருமைப்பாட்டைச் சிதைப்பதற்கு உதவமாட்டாது என்பதே உறுதி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் என்றெல்லாம்  விடப்படும் வெற்று வேட்டுகள், தமிழர் பிரதேசங்களில் வெற்று வேட்டாகவே போகும். தமிழ்த் தேசிய அரசியலுக்கு இது ஒரு சோதனைக்காலம் என்று நிம்மதியடைந்து விடலாம்.

-இலட்சுமணன்