இலங்கையில் தமிழர்களுக்கு எதிர்காலம் இல்லை- அருட்தந்தை சக்திவேல்

498 0

தமிழ் மக்களுக்கு ஒரு எதிர்காலமற்ற நிலைமையின் எடுத்துக்காட்டாகவே 72 ஆவது சுதந்திர தினம் அமைந்துள்ளதாக தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வணபிதா அருட்தந்தை சக்திவேல் இந்நிலைமையை எதிர்கொள்வதற்காக தமிழ் அரசியல் தலைமைகள் ஒரே நேர் கோட்டில் சந்திக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு எனவும் குறிப்பிட்டார்.

சுதந்திர தின தேசிய பிரதான நிகழ்வு இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

தந்திரதினம் யாருக்கென்ற கேள்வி எழுந்துள்ளது. 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டின் யாப்புகளில் தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

அதற்கு எதிராகவே தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை தோற்கடிக்கும் வகையிலேயே 30 வருட காலம் யுத்தம் இடம் பெற்றது.

அத்துடன், தனிநாடு கோரும் அளவிற்கு இந்த பிரச்சினை வலுவடைந்தது. இவ்வாறாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவதந்த ராஜபக்ஷ தரப்பனரே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இடம் பெறும் முதலாவது சுதந்திரத்தின நிகழ்வில் ; தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. 1978 ,1972 ஆம் ஆண்டு யாப்புகளின் மூலமாக தமிழ் மக்களின் அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்ட நிலைமையே மீண்டும் ஏற்பட்டுள்ளது.

;தமிழ் மக்கள் இன்னமும் புறக்கணிக்கப்படுவர் என்பதற்கு தகுந்த எடுத்துக்காட்டாகவே இந்த தேசிய கீத விடயம் அமைந்துள்ளது.

இந்த சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கானது அல்ல என்பதனை இதன் ஊடாக அறிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கின்றது. அத்துடன் , தமிழ் அரசியல் தலைமைகள் விழித்துக்கொள்ளவேண்டிய தருணமாகவே இது அமைந்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.