கூடுதலாக 6 நாடுகளுக்குப் பயணத் தடை விதித்த ட்ரம்ப்

339 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 6 நாடுகளுக்கு கூடுதலாகப் பயணத் தடையை விதித்துள்ளார். இந்த அறிவிப்பை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் வுல்ஃப் தெரிவித்தார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் சாட் வுல்ஃப் கூறும்போது, “எரித்திரியா, கிர்கிஸ்தான், மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு விசாக்களை வழங்குவதை அமெரிக்கா நிறுத்தி வைக்கும். மேலும், தற்காலிகமாக அமெரிக்காவுக்குப் பயணம் (சுற்றுலா, வணிகம்) மேற்கொள்பவர்களுக்கு இந்தத் தடை பொறுத்தாது” என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்தப் பயணத் தடை முடிவை அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

முன்னதாக சிரியா, இராக், ஈரான், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளின் அகதிகள், பயணிகள் அமெரிக்காவில் நுழையத் தடை விதித்து அதிபர் ட்ரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி உத்தரவிட்டார். பின்னர் இந்தப் பட்டியலில் வடகொரியாவும், வெனிசுலாவும் சேர்க்கப்பட்டன.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ட்ரம்ப் தடை விதித்தது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய பயணத் தடையை ட்ரம்ப் விதித்துள்ளார்.