மக்களுக்காக உழைக்கும் தலைவருக்கு தேர்தலில் வெற்றி பெற கட்சியில் பதவிகள் தேவையில்லை- மஹிந்த

299 0

மக்களுக்காக உழைக்கும் தலைவருக்கு தேர்தலில் வெற்றி பெற கட்சி பதவிகள் தேவையில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாடளாவிய ரீதியில் வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தின் முதலாவது வேலைத்திட்டத்தினை இன்று ஆரம்பித்து இருக்கின்றோம். அதற்கான நிதியையும் வழங்கவுள்ளோம்.

அதாவது கிராமங்களுக்கு சென்று பார்க்கும்போது அங்கு காணப்படுகின்ற வீடுகள் வசதியற்ற முறையில் காணப்படுபகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

நாம் கடந்த அரசாங்கத்தை போன்று இவ்விடயங்களுக்கு நான்கு வருடங்களை பயன்படுத்தால் ஒரு வருடத்தில் நிறைவு செய்யும் வகையிலேயே இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க இருக்கின்றோம்.

அதாவது இந்த வருடம் நிறைவடைவதற்குள் இந்த வீட்டுத்திட்டத்தை அமைத்து மக்களிடம் கையளிப்போம். இந்த வேலைத்திட்டத்துக்குள் சிங்களம், முஸ்லிம், தமிழ் என வேறுபாடுகள் காட்டப்படாது.

அத்துடன் இவர்கள் பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என அவதானித்து பாகுபாடு காட்டமாட்டோம்.

நாம் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்ற காரணத்திற்காக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதேபோன்று அரசியலில் பிரவேசிக்க வேண்டுமென்பற்காக செய்யும் வியாபார வேலைத்திட்டமும் அல்ல.

மேலும் சிறந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க  அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில்  வெற்றி பெற்று, 2/3 பெருமான்மையை  பெற வேண்டியதே தற்போதைய எங்களது தேவைப்பாடாக இருக்கின்றது.

இதேவேளை இலங்கை வரலாற்றில் இதுவரைக்காலமும் நிகழாத ஒரு சம்பவம்தான் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவிக்காக ஒருவருக்கு ஒருவர் மோதுண்டு கொண்டு இருப்பதாகும்.

அதாவது ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவிக்காக ஒரு கூட்டம் நடத்தப்பட்டமையையும் இலங்கை இதிகாசங்களில் இதுவரை காலமும் காணவில்லை.

தற்போது ஐக்கிய தேசியக்கட்சி பிளவடைந்து காணப்படுகிறது. மேலும் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு தலைவர் பதவி அவசியமில்லை.

அத்துடன், நான் நாட்டின் ஜனாதிபதியாக வரும்போது கட்சியின் தலைவராக இருக்கவில்லை. மாறாக  ஜனாதிபதியானதன் பின்னரே குறித்த பதவி எனக்கு கிடைத்தது.

அதாவது  மக்களுக்காக உழைக்கும் தலைவருக்கு தேர்தலில் வெற்றி பெற கட்சி பதவிகள் தேவையில்லை” என குறிப்பிட்டுள்ளார்.