ரஜினியும் வருமான வரியும்..

203 0

நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கை, வருமான வரித் துறை திரும்பப் பெற்றுள்ளது. இது சரியான நடவடிக்கைதானா? என்னதான் நடந்தது? சில சமயங்களில் வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் படிவங்களின் மீது ஆய்வு மேற்கொண்டு `சரியான வருமானம் இதுதான்’ என வருமானவரித் துறை, ஒரு தொகையை நிர்ணயிக்கலாம். இந்த நிர்ணயத்துக்கு எதிராக, வரி செலுத்துவோர், அதற்கான ஆணையர் முன்பு முறையீடு செய்யலாம்; இங்கு மன நிறைவான தீர்ப்பு கிட்டவில்லை எனில், தீர்ப்பாயம்’ முன்பாக மேல் முறையீடு செய்யலாம். அதற்கும் மேல், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை கூட செல்லலாம்.

இவ்வகை முறையீடு / வழக்குகள் காரணமாக, வரிஅலுவலர்களின் உழைப்பு, நேரம்,`ஆக்கபூர்வமான’ செயல்பாடுகளில் இருந்து விலகிச் சென்றுவீணாகிறது. எனவே, இத்தகைய முறையீடுகள் / வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டி, மத்திய நிதி அமைச்சகத்தின் நேரடி வரி வாரியம் ஒரு முடிவு செய்தது.

அதன்படி, சுற்றறிக்கை எண் 3/2018 தேதி 11.07.2018 – துறை சார்ந்த முறையீடுகளுக்கான நிதிவரம்பை ஒரு கோடியாக உயர்த்தியது. தொடர்ந்து, சுற்றறிக்கை எண்17/2019 தேதி 18 ஆகஸ்ட் 2019.கோப்பு எண் – F No. 279/Misc.142/2007-ITJ(Pt) மூலம் இதனை மேலும் தெளிவுபடுத்தியது. வரிசெலுத்துவோர் மீது மேல் முறையிடு (அ) வழக்கு தொடுப்பதற்கு குறைந்தபட்ச வரித் தொகை அளவு உயர்த்தப்பட்டது.

தீர்ப்பாயத்தின் முன்பு மேல்முறையீடு செய்ய ரூ 50 லட்சம்; உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ரூ.1 கோடி; உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல ரூ. 2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. அதாவது, சச்சரவுக்கு உள்ளாகும் வரித்தொகை, இந்த அளவுக்குக் கீழ் இருந்தால், வரித் துறை, அதன் மீது மேல்முறையீடு (அ) வழக்கு தொடுக்காது. மேலோட்டமாக பார்த்தால், இது ஏதோ சலுகை போல் தோன்றும். அதுதான் இல்லை.

வரித் துறை எப்போது ஒருவர் மீது, ‘மேல் முறையீடு’ செய்யும்? இதற்கு முந்தைய முறையீட்டில், வரி செலுத்துவோருக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கும். அப்போதுதானே, வரித் துறைஅதற்கு எதிராக, மேல்முறையீட்டுக்குச் செல்ல வேண்டிய தேவையே எழும்? இதற்கு என்னபொருள்..? ஏற்கனவே ஒரு முறையீட்டு அமைப்பு, வரி செலுத்துவோரின் வாதம் / நிலைப்பாடு சரிதான் என்று தீர்ப்பு அளித்து இருக்கிறது! வரித் துறை இதனை ஏற்க மறுத்து, மேலும் முறையிடுகிறது.

ரஜினி விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. வெளிவந்துள்ள செய்திகளின் படி, தனது வருமானம் எதையும் ரஜினி, மறைத்து விடவில்லை. திருத்தப்பட்ட படிவ (Revised Return) தாக்கல், வருமான நிர்ணயம், வருமான வரித் தொகை ஆகியவற்றில் `சச்சரவு’ ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. அபராதத் தொகை மட்டுமே வழக்குக்கு உள்ளாகி உள்ளது. இந்தத் தொகைக்கான வழக்கு, வரித் துறையால் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

வரித் தொகை தாண்டி, ஆண்டுக்கு சுமார் 6 லட்சம் ருபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; அதற்கான தகுந்த முகாந்திரம் இல்லை என்று ரஜினி மேல் முறையீடு செய்துள்ளார்; வருமான வரித் தீர்ப்பாயம், ரஜினியின் கூற்றை ஆமோதித்து வரித்துறை விதித்த அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளது. தீர்ப்பாணையத்தின் உத்தரவின் மீது வரித்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தற்போது இதனை விலக்கிக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வருமான வரித் துறை ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. நேரடி வரி வாரியத்தின் அறிவுறுத்தலின் படி, உயர்த்தப்பட்ட அளவுகோலுக்குக் கீழ் இருந்த 1072 வழக்குகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. (தீர்ப்பாய மேல்முறையீடுகள் – 356; உயர் நீதிமன்ற வழக்குகள் – 716) உச்ச நீதிமன்றத்தின் முன்பு உள்ள 52 வழக்குகளும் விலக்கிக் கொள்ளப்பட இருக்கின்றன. இவைகளில் ஒன்றுதான் ரஜினியின் வழக்கும்.

இதில் ரஜினிக்கு என்று `சிறப்பு’வசதி (அ) சலுகை எதுவும் இல்லை. ரஜினியைப் போன்று மேலும் பலர் இந்த வளையத்துக்குள் வந்திருக்கலாம். மற்றவர்களுக்கு ஒருகோடியாக இருக்கலாம்; `ரஜினி’ என்பதால், ஆறு லட்ச ரூபாயாக இருந்தாலும் வழக்கு நடத்த வேண்டும் என்று சொல்ல முடியுமா..?

ஒரு பொதுவான விதி / விதிவிலக்கு. ரஜினிக்கும் பொருந்துகிறது. நிறைவாக, `இது என்ன வருமானம்’ என்று கூட இவருக்குத் தெரியாதா? என்று ஒரு கேள்வி பரவலாக எழுகிறது. அவருக்கு மட்டுமல்ல; வரி மதிப்பீட்டு அலுவலருக்குமே கூட, வருமானத் தலைப்பு / மூலம் (Head / Source of Income) பற்றி இரு வேறு கருத்துகள் இருக்க சாத்தியம் உண்டு.அவரவர் அனுமானப்படி வெவ்வேறு பொருள் தருகிறாற் போல்தான், வருமான வரிச் சட்டம் இருக்கிறது. உலகம் முழுக்க அப்படித்தான். ஒன்றும் செய்வதற்கு இல்லை.

ரஜினி செய்தது சரியா தவறா? வருமான வரித் துறை சாதகமாக நடந்து கொண்டதா? ரஜினிக்கு எதிராக (அ) ஆதரவாக மட்டும் ஏன் இத்தனை கூக்குரல் எழ வேண்டும்? ஒரே காரணம்தான். அவர் – ரஜினி!