கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி சீன நாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தருவதற்கு விசா வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
எனினும் இலங்கையில் உள்ள சீன நாட்டவர்கள் அவர்களது நாட்டிற்கு செல்வதில் எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகி இதுவரையில் 106 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு 4515 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி, பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்தே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சீன நாட்டினருக்கான விசா வழங்கும் நடவடிக்கையில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

