ஹட்டனில் தீ விபத்து – தீக்கிரையானது விடுதி

322 0

ஹட்டன் – மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த விடுதியொன்று தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.15 மணியளவில் தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து ஹட்டன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 2 மணித்தியாலங்களுக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

6 மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்துள்ளது. இந்த விடுதி அவ்வப்போது வாடகைக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை கணிக்கப்படவில்லை எனவும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.