எங்களால் நிராகரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம்: இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் எச்சரிக்கை

188 0

எங்களால் நிராகரிக்கப்பட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தையும் அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலுக்கு பாலஸ்தீனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் அமைதி ஒப்பந்ததை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அமெரிக்க பயணத்துக்கு முன்னதாகவே வெளியிட இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக பாலஸ்தீனத்திற்கு அமெரிக்க அதிபர் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை.

இந்த நிலையில் தங்களால் நிராகரிப்பட்ட எந்த அமைதி ஒப்பந்தத்தை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என்று பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக ஜெருசலமேமை இஸ்ரேல் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தபோதே பாலஸ்தீனம் அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்துள்ளது.