எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் இரட்டை வேட நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டிருந்த விசேட அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எமது அரசாங்கம் எக் காரணத்துக்காகவும் இதுபோன்ற ஒப்பந்தங்களை பாராளுமன்றத்துக்கோ, மக்களுக்கோ ஒளித்து திருட்டுத்தனமாக கைச்சாத்திடாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று அரசாங்கம் நாட்டுக்கு பாதிப்பான எந்த ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை, அதுதான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்குமிடையிலான வித்தியாசம் என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும் சில மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் அமைச்சர் என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பில் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. இந்த உடன்படிக்கை தொடர்பில் தீர்மானம் ஒன்று எடுக்க வேண்டும் என்று கூறி நழுவிவிட்டார். இதன்மூலம் அவரது இரட்டை வேடம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் எதிர்க்கட்சித் தலைவர் மகாநாயக்க தேரர்களை சந்தித்து எம்.சி.சி. ஒப்பந்தத்தை கிழித்தெறிய வேண்டுமென்றும் கூறியுள்ளார். அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அதே மனநிலையிலேயே உள்ளனர். அவர்களின் இந்தக் கூற்றைக் கண்டு நான் வியப்படைந்தேன்.
தற்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சில வாரங்களுக்கு முன் ஐக்கிய தேசிய கட்சியின் உதவித் தலைவராக அமைச்சரவையில் முக்கியமான ஒருவராக இருந்தார். ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு ஐ.தே. கட்சி அமைச்சரவை எம்.சி.சி. ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் உத்தியோபூர்வமாக தீர்மானம் எடுத்திருந்தது.
அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதனைக் கைச்சாத்திட வேண்டுமெனவும் அப்போதைய பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அந்த நேரம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான் எழுத்து மூல அறிக்கையொன்றை வெளியிட்டு பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் மறைத்து அந்த உடன்படிக்கையை ஒருபோதும் கைச்சாத்திடக் கூடாதென தெரிவித்திருந்தேன்.
அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் இதுபோன்று வெளிநாட்டுடன் ஒப்பந்தமொன்றை அவசரமாக மேற்கொள்வது தார்மீக மற்றது என்றும் நான் தெரியப்படுத்தியிருந்தேன். அந்த நிலையில் எம். சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின் தேர்தலில் மக்கள் ஆணையை பெற்றதரப்புக்கே முடியுமென்றும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
அந்த வேளையில் ஐ.தே. கட்சி உதவித்தலைவராகவும் அமைச்சரவையின் முக்கிய உறுப்பினராகவுமிருந்த சஜித் பிரேமதாச அப்போது மௌனம் காத்தார். குறைந்த பட்சம் தேர்தல்மேடைகளில் கூட எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பில் எதுவும் பேசியிருக்கவில்லை.
அரசியலில் ஒரு தார்மீக பண்பு இருக்கவேண்டும். ஐ.தே. கட்சியில் தற்போது இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் தரப்பில் முக்கிய தலைவரான நிதியமைச்சர் மங்கள சமரவீர அந்த ஒப்பந்தத்தை பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் மறைத்து கைச்சாத்திடுவதற்கு தயாராகவே இருந்தார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

