சிறப்புடன் நடைபெற்ற வெண்கரம் அமைப்பின் பட்டிப்பொங்கல் விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்!

888 0

தமிழர்களின் பாரம்பரிய விழாவான தைப்பொங்கல் விழாவின் ஓரங்கமான பட்டிப்பொங்கல் விழாவை முன்னிட்டு வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழாவும், கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நேற்று வியாழன் மாலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் அமைந்திருக்கும் சாந்தை-சில்லாலை படிப்பக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பட்டிப் பொங்கல் நிகழ்வை அப்படிப்பகத்தில் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் மாணவர்களும் பெற்றோரும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் செயற்பாட்டாளர் A.S.சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்த சில்லாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முதல்வர் J.M.G.P. பியன்வெனு, BEEFORT சர்வதேச பாடசாலை நிறுவுநர் ம.பகீரதன், வெண்கரம் அமைப்பின் நிறுவுநரும் செயற்பாட்டாளருமான மு.கோமகன் மற்றும் காந்தள் கலைக்கூடத்தின் நிறுவுநரும் வெண்கரம் அமைப்பின் செயற்பாட்டாளருமான இரா.மயூதரன் ஆகியோர் மங்கல விளக்கினை ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்துவைத்தனர்.

தொடர்ந்து வெண்கரம் அமைப்பின் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் மாணவர்களால் தேவாரம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. பட்டிப்பொங்கலை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்பட்டிருந்த கைக்கொடி மாட்டுச் சவாரி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் போட்டியில் பங்குபற்றிய மாடுகளின் உரிமையாளர்களுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அ, ஆ, இ ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்ற மாடுகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் மாலை அணிவித்து கௌரவித்திருந்தனர். இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் வெண்கரம் சாந்தை-சில்லாலை படிப்பகத்தின் மாணவர்களும் பங்கேற்று சிறப்பித்திருந்தனர்.