முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிக்குவிக் பிறந்தநாள் விழா: தேனி பாலார்பட்டியில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்

45 0

தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டியில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய பொறியாளர் பென்னிக்குவிக் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தை ஊர்வலமாக எடுத்துவந்தும், பெண்கள் பொங்கல் வைத்தும் பென்னிகுவிக்கை வழிபட்டனர்.

ஐந்து மாவட்டங்களின் வறட்சியை போக்கிட உதவும் வகையில் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் ஆங்கிலேயே பொறியாளரான ஜான் பென்னிக்குவிக். இவரால் தான் தங்கள் நிலங்கள் இன்று செழித்து பயிர்கள் வளர்க்கிறது என்பதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பென்னிக்குவிக் பிறந்தநாளை தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிராமமக்கள் கொண்டாடிவருகின்றனர்.

போடி அருகேயுள்ள பாலார்பட்டியில் நேற்று (புதன்கிழமை) வெகுசிறப்பாக இவரின் பிறந்தநாள் கொண்டாடாப்பட்டது. பெண்கள் விரதமிருந்து ஊர் மைதானத்தில் பொங்கல் வைத்தனர்.

 

பின்னர் பென்னிக்குவிக் படத்திற்கு மாலை அணிவித்து அவரது படத்தை ஏந்திய வண்ணம் சிறுவர்கள் முதல் முதியவர்கள், ஆண்கள், பெண்கள் என கிராமமக்கள் அனைவரும் ஊர்வலமாக பென்னிக்குவிக் நினைவு மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கு பென்னிக்குவிக் படத்திற்கு முன்பு பொங்கல் வைத்தும், நெற்கதிர்கள் வைத்தும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்கள் தலைக்க வறண்டுகிடந்த நிலத்திற்கு தண்ணீர் கொண்டுவந்து தலைத்தோங்க செய்ததற்கும், தற்போதுள்ள தலைமுறைமட்டுமல்லாது, எதிர்கால

தலைமுறைகள் செழித்துவாழுவும் வழிவகுத்த பொறியாளர் பென்னிக்குவிக் கிற்கு நன்றி தெரிவித்தும், அவரது நினைவுகளை சிறுவர்களுக்கு எடுத்தும் கூறினர். தேவராட்டம், சிலம்பாட்டங்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பென்னிக்குவிக் எழுச்சி பேரவை தலைவர் ஆண்டி, திரைப்பட நடிகர்கள் ஜோ.மல்லூரி, சுருளிப்பட்டி சிவாஜி மற்றும் பாலார்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் திரளாக பென்னிக்குவிக் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.