ஐ.நா மனித உரிமைகள் பேரவை குறித்து இலங்கையின் கருத்திற்கு நேரடியாகப் பதிலளிக்க மறுத்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர்

279 0

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய உயர்மட்ட அதிகாரியான ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கான ஆதரவு குறித்து வெளிப்படையாக எதனையும் கூறவில்லை.

சிறிலங்காவிற்கும் ரஷ்யாவிற்கும் அக்கறைக்குரிய விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட ஐ.நாவின் அமைப்புக்களில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செயலாற்றும் என்று இன்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் பின்னர் கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்

எனினும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்றோவ் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமது நாட்டினால் முன்வைக்கப்படும் யோசனைகளுக்கு சிறிலங்கா வழங்கிவரும் ஆதரவிற்கு நன்றி கூறினாரே தவிர, மனித உரிமைகள் பேரவை குறித்து எவ்வித நேரிடையான கருத்துக்களையும் வெளியிடவில்லை.

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்றோவ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்காவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது விஜயத்தின் முதற்கட்டமாக ; இன்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அதனைத்தொடர்ந்து இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாக இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டனர்.

ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட ரஷ்ய வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருநாடுகளும் தொடர்ந்தும் ஒத்துழைப்புடன் செயலாற்றுவது பற்றி தினேஷ் குணவர்தன வெளியிட்ட கருத்திற்கு எந்தவொரு நேரிடையான பதிலையும் வழங்கவில்லை. மாறாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ரஷ்யாவினால் முன்வைக்கப்படுகின்ற சிறந்த யோசனைகளுக்கு இலங்கை வழங்கிவருகின்ற ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக மாத்திரமே குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. அதில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கையினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடப்பாடுகள் அடங்கியதும், 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தினால் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்தும் அங்கு ஆராயப்படும்.

எனினும் கடந்த நவம்பர் மாதம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாகப் பகிரங்கமாகக் கூறிவருகின்றனர்

கடந்த ; 10 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ரஷ்ய உயர்மட்ட அதிகாரியான அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவிற்கான ஆதரவு குறித்து வெளிப்படையாக எதனையும் கூறாதது முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகிறது