குரூப்-4 தேர்வில் முறைகேடு – 35 பேரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள்

197 0

குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததா? என்பதை கண்டறிய, சென்னையில் நேற்று ஒரே நாளில் 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய திறமையை பரிசோதிக்க தகுதித்தேர்வும் நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் நவம்பர் மாதம் 12-ந்தேதி வெளியாயின.

இதைத்தொடர்ந்து, தேர்வில் தேர்ச்சி பெற்ற 12 லட்சத்து 76 ஆயிரத்து 108 பேரின் தரவரிசை பட்டியலை டி.என்.பி. எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது.

இந்த பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றவர்களில் 40 பேர் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதி இருப்பதாகவும், இதனால் தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், அந்த 40 பேர் பட்டியலில் உள்ளவர்கள் தான் இட ஒதுக்கீடு தரவரிசை பட்டியலிலும், மாநில அளவில் முதல் 5 இடங்களை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி. (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அடுத்த கட்டமாக ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 13-ந்தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகும்படி, அந்த மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 35 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 35 பேரும் சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆஜராயினர்.

தரவரிசை பட்டியலில் முதல் 40 இடங்களை பிடித்த சிலரும், ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களில் சிலரும் விசாரணைக்கு வந்து இருந்தனர். குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருவராஜூ என்பவரும் விசாரணைக்காக ஆஜரானார்.

அவர்களிடம் டி.என்.பி. எஸ்.சி. செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் ஆகியோர் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை

விசாரணையின் போது, 35 பேரில் பெரும்பாலானோர் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் எதற்காக ராமேசுவரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்தீர்கள்? என்று விசாரணையின் போது கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

அதற்கு அவர்கள் அளித்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவர்கள் தெரிவித்த காரணத்தை எழுதித்தரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.

அதன்படி, விசாரணைக்கு ஆஜரானவர்கள் ராமேசுவரம், கீழக்கரை மையங்களை தேர்வு செய்ததற்கான காரணத்தை எழுதி கொடுத்து உள்ளனர்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி உள்ளார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவர், தனது குழந்தை பிறந்து சில மாதங்களில் இறந்து போனதாகவும், குழந்தைக்கு திதி கொடுக்க வேண்டிய தேதி, தேர்வு தேதிக்கு ஒருநாள் முன்னதாக இருந்ததால் திதி கொடுத்து விட்டு மறுநாள் ராமேசுவரத்தில் தேர்வு எழுதி விட்டு வரலாம் என்று முடிவு செய்து ராமேசுவரம் மையத்தை தேர்வு செய்ததாகவும் அதிகாரிகளிடம் கூறி உள்ளார்.

இதேபோன்று, விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி உள்ளார். அவர், ராமேசுவரம் மையத்தை தேர்வு செய்ததற்கு ஒரு காரணத்தை கூறி உள்ளார். அவர் தெரிவித்த காரணம் குறித்து அதிகாரிகள் மடக்கி மடக்கி அவரிடம் கேள்வி எழுப்பியதால், சரியான பதிலை தெரிவிக்க முடியாமல் திணறி உள்ளார்.

அதிக மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றவர்களுக்கு, போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான தகுதி உள்ளதா? என்பதை பரிசோதிப்பதற்காக தகுதித்தேர்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து விசாரணைக்கு ஆஜரானவர்களிடம் தெரிவித்த அதிகாரிகள், தகுதித்தேர்வை எதிர்கொள்ள தயாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது ஒரு சிலர் மட்டுமே அதற்கு தயார் என்று கூறி உள்ளனர். சிலர் தயக்கம் காட்டி இருக்கின்றனர்.

இருந்தபோதிலும், தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்றவர்களுக்கு அதிகாரிகள் தகுதித்தேர்வை நடத்தினர்.

தேர்வில் தோல்வி அடைந்தவர்களிடம், தேர்வு மையங்களில் ஏதேனும் குளறுபடி நடந்ததா? தேர்வு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை அதிகாரிகள் எழுப்பி அவர்களுடைய பதிலை கேட்டு அறிந்தனர்.

விசாரணை முடிந்து வெளியே வந்த ஒருவர், “தேர்வில் தோல்வி அடைந்தபோதும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுத்ததால் வந்தேன். விசாரணைக்கு அழைத்திருப்பதால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன். ஒருவேளை விசாரணைக்கு அழைத்தும் வராதபட்சத்தில் போலீசார் மூலம் ஏதாவது நடவடிக்கை எடுத்து விடுவார்களோ? என்ற அச்சமும் இருந்ததால் விசாரணைக்கு வந்தேன்” என்று தெரிவித்தார்.

விசாரணைக்கு வந்தவர்களில் பலர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்து இருந்தனர். அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் விசாரணை முடிவடையும் வரை அவர்கள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வெளியே காத்து இருந்தனர்.

இதேபோன்று விசாரணைக்கு அழைக்கப்படாமல், தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த சென்னை உள்ளிட்ட பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பலர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வந்து இருந்தனர். நேற்று விசாரணை முடிவடைந்து நல்ல பதில் கிடைக்கும் என்றும், விரைவில் வேலையில் சேர்ந்து விடலாம் என்றும் அவர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

நேற்றுடன் விசாரணை முடிவடையவில்லை என்பதையும், தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்பதையும் அறிந்த அவர்கள் மாலையில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர்.

நேற்று நடந்த விசாரணை குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்பே, விசாரணை குறித்து தெரிவிக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோரிடம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதன்காரணமாக, இந்த விசாரணை பொங்கலுக்கு பின்பும் தொடரும் என்று கூறப்படுகிறது.