சேலம் அருகே கடன் தொல்லையால் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தனது 3 மகன்களின் பசியை போக்க பெண் ஒருவர் தலைமுடியை விற்றுள்ளார்.சேலம் பொன்னாம்மா பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது 36). இவரது மனைவி பிரரேமா(31). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்த செல்வம் செங்கல் சூளை உரிமையாளரிடம் கடன் வாங்கினார். மேலும் பலரிடன் கடன் வாங்கியதால் ரூ.5 லட்சத்திற்கு மேல் செல்வத்திற்கு கடன் ஏற்பட்டது. இதனால் கடனை திருப்பி செலுத்த முடியாததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பிரேமா வீமனூர் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். அப்போது பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் கடந்த வாரம் பிரேமா தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த செங்கல் சூளையில் வேலை பார்த்தவர்கள் அவரை மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அப்போதும் பசியால் துடித்த அவரது குழந்தைகளுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
இதனால் பிரேமா செய்வதறியாது திகைத்தார். பின்னர் குழந்தைகளின் பசியை போக்க முடியாமல் வருந்திய பிரேமா தலைமுடியை விற்க முடிவு செய்தார். அதன்படி தலைமுடியை எடைக்கு கொடுத்தார். அதன் மூலம் பிரேமாவிற்கு ரூ.150 கிடைத்தது. அதை வைத்து குழந்தைகளுக்கு உணவு வாங்கி கொடுத்து பசியை போக்கினார்.
இதையறிந்த சமூக ஆர்வலர் பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் பிரேமாவை சந்தித்து உணவு வழங்கினர். மேலும் பேஸ்புக்கிலும் பிரேமாவின் வறுமை குறித்து பதிவிட்டனர். இதன் மூலம் ரூ.1 லட்சம் கிடைத்தது. மீதமுள்ள பணத்தை பாலா மற்றும் அவரது நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்து பிரேமாவிற்கு கடன் கொடுத்தவரிடம் வழங்கினர். இதனால் பிரேமா ஆனந்த கண்ணீர் வடித்தார். இதுகுறித்து பிரேமாவிற்கு உதவிய சிலர் கூறியதாவது:-
பிரேமாவின் நிலை குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டதால் ரூ.1 லட்சத்திற்கு மேல் பண உதவி கிடைத்தது. அதை வைத்து அவருக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரேமாவிற்கு ஆவினில் வேலை தருவதாகவும், குழந்தைகளின் படிப்பு செலவை மாவட்ட நிர்வாகம் ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேமா தற்போது சற்று ஆறுதலாக உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

