உண்மையை கண்டறியும் ஆணைக்குழு அடுத்த வருட ஆரம்பத்தில்!

297 0

mangala-samaraweeraவடக்கு, கிழக்கை கேந்திரமாக கொண்டு நடந்த போரின் போது நடந்தது என்ன என்பது பற்றி கண்டறிய உண்மை,நியாயம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவை அடுத்த வருட ஆரம்பத்தில் ஸ்தாபிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நியமிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் உறுதியளித்திருந்தார்.

கடந்த செம்டம்பர் மாதம் இந்த ஆணைக்குழு நியமிக்கப்படவிருந்தது. எனினும் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆணைக்குழுவை நியமிக்கும் பணிகளை நல்லிணக்க பொறிமுறை தொடர்பான செயலகம் மேற்கொள்ளும்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பான உலகில் முதல் அனுபவம், தென் ஆபிரிக்காவில் நடந்த இனவாத போராட்டங்களின் பின்னர் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

1960ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி தொடர்பில் தென் ஆபிரிக்காவின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

நெல்சன் மண்டேலா ஜனாதிபதியாக பதவி வகித்த 1995ஆம் ஆண்டு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இது மிகவும் வெற்றிகரமான சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தை பெற்றுள்ள நல்லிணக்கம் தொடர்பான பொறிமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.