நீதிமன்ற சுயாதீனத்தை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் -நாமல்

231 0

நீதிமன்ற சுயாதீனத்தன்மை கடந்த அரசாங்கத்தினால் முற்றாக இல்லாமலாக்கப்பட்டுள்ளது. அதன் உண்மைத்தன்மை தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றது என்றாலும் நீதிமன்ற சுயாதீனத்தை கட்டியெழுப்ப நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்

அத்துடன் நாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே அதிகாரத்துக்கு வந்திருக்கின்றோமே தவிர யாரையும் பழிவாங்க அல்ல. அதற்கான தேவையும் எக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினால் கொண்டுவந்த ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதிமன்ற சுயாதீனம் தொடர்பாக இவர்கள் கதைக்கின்றனர். தற்போது ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவுகள் வெளியாகியுள்ளன.

பொலிஸ் அதிகாரிகள் , நீதிபதிகள் ஆகியோருடன் கதைக்கின்றனர். நீதித்துறையில் தலையிட வேண்டாம் அவர்களை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என அன்று நாங்கள் கோரிக்கை விடுத்தோம். சட்டவிரோத நிறுனங்களை அமைத்து அரசியல் பழிவாங்கல்களை செய்ய வேண்டாமென கேட்டுக்கொண்டோம். ஆனால் இதற்கு செவிசாய்க்கவில்லை.

ஆனால் இவர்கள் செய்த தவறுகளுக்கு இப்போது கைது செய்யப்படும் போது அதனை எதிர்க்கின்றனர்.

அன்று அப்படி செய்தவர்களே இன்று நீதித்துறை சுயாதீனம் தொடர்பாக கதைக்கின்றார்கள். இவர்களால் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறாயினும் நாங்கள் நீதிமன்றம் மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கையெடுப்போம். அன்று பொலிஸ் அதிகாரியுடன் தொலைபேசியில் உரையாடி யாரை கைது செய்ய வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டுள்ளனர். நீதிக்கட்டமைப்புக்கு செய்த அபகீர்த்தியிலிருந்து இவர்களால் தப்பிக்க முடியாது. இப்போதாவது நீதித்துறை சுயாதீனமாக செயற்பட இடமளியுங்கள் என கேட்கின்றோம்.

அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள வேலைத்திட்டம் 100 நாட்களுக்கல்ல. 5வருட வேலைத்திட்டமாகும். அதனை நடைமுறைப்படுத்துவதே எமது இலக்காகும். அதற்காகவே நாங்கள் அதிகாரத்துக்கு வந்திருக்கின்றோம்.  மாறாக யாரையும் பழிவாங்கும் வேலைத்திட்டம் எம்மிடமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு வேலை செய்வதற்கவே அன்றி பழிவாங்குவதற்காக அல்ல என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என அவர் தெரிவித்தார்.