உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 3 பதவிகளுக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் – அதிகாரிகள் தகவல்

298 0

தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத 3 பதவிகளுக்கு 6 மாதத்துக்குள் தேர்தல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, வார்டு மறுவரையறையின்போது சுழற்சி முறையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை மக்கள் ஏற்காததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட த.மறவக்காடு ஊராட்சியில் 623 ஆண் வாக்காளர்கள், 672 பெண் வாக்காளர்கள் என மொத்தம், 1,295 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 6 வார்டுகள் உள்ள நிலையில் அவற்றுக்கான உறுப்பினர்களை கிராம மக்கள் போட்டியின்றித் தேர்வு செய்துவிட்டனர்.

இந்நிலையில், வார்டு மறுசுழற்சியின்போது, இடஒதுக்கீட்டின்படி ஆதிதிராவிடர்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அங்கு பெரும்பான்மையாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் உள்ள 6 ஆதிதிராவிடர் குடும்பங்களில் 15 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யாததால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. ஊராட்சி மன்றத் தலைவர் பதவி காலியாக உள்ளது.

இது குறித்து அந்த கிராமத்தினர் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் ஆதிதிராவிடர் வகுப்பு வாக்காளர்கள் 15 பேர் மட்டுமே உள்ள நிலையில், வார்டு மறுசுழற்சியின்போது ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அந்த சமுதாயத்தினர் யாரும் போட்டியிட முன்வராததால், தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று முறையிட்டோம். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் எங்கள் ஊரில் வார்டு உறுப்பினருக்கு வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றனர். இதேபோல், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிராங்குடியில் 6 ஊராட்சி வார்டுகளில் 6-வது வார்டுக்கும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் இஞ்சிக்கொல்லையில் 9 ஊராட்சி வார்டுகளில் 5-வது வார்டுக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை.

இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது, காலியாக உள்ள ஊராட்சித் தலைவர் மற்றும் 2 ஊராட்சி உறுப்பினர் வார்டுகளுக்கும் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றனர்.