ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள் முரண்பாட்டு நிலைக்கு தீர்வு காண்பதற்கு தொடர் பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மும்முரமாக ஈட்டுபட்டு வருகின்றனர்.
ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்து இவர்கள் நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னிணியின் பங்காளிக்கட்சித் தலைவர்களான மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் ஐ.தே.க.எம்.பி.க்களான ரவிகருணாநாயக்க தலதா அத்துகொறல ரஞ்சித் மத்தும பண்டார உட்பட வேறுசிலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கட்சியின் தலைமைப்பதவி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் பொதுத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
கட்சி தலைமைப்பதவியை துறந்து சிரேஷ்ட தலைவராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கருஜெயசூரியவை நியமிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக கருஜயசூரியவை களமிறக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் இன்றைய தினமும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சஜித் பிரேமதாஸவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளதாக இன்றைய பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கருஜயசூரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

