சி.சாத்தமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்- கலெக்டர் உத்தரவு

450 0

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் சி.சாத்தமங்கலம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் படி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

இதில் சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அருள்பிரகாசம் என்ற தமிழ் ஒளி, திருமுகம், இளங்கோவன், செல்லையா, மேனன் ஆகிய 5 பேர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் கொண்டு செல்லப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.

இதனைத்தொடர்ந்து ஓட்டுகள் எண்ணும் பணி நடைபெற்றபோது, துணை வேட்பாளர் பட்டியலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அருள்பிரகாசம் என்ற தமிழ்ஒளியின் பெயர் இல்லை.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் உடனடியாக மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவருக்கான வாக்கு எண்ணும் பணியை நிறுத்தும்படி உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சி.சாத்தமங்கலம் பஞ்சாயத்து தலைவருக்கான வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணும் பணி திடீர் என்று நிறுத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.