பிரான்சில் சிறப்படைந்த சோதியா கலைக்கல்லூரியின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா!

105 0

பிரான்சு சோதியா கலைக்கல்லூரியின் 30 ஆவது ஆண்டு நிறைவு விழா கடந்த 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை பரிஸ் Max dormoy பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக இடம்பெற்றது. இன்னியம் அணிவகுப்போடு மண்டபத்திற்கு விருந்தினர்களும் ஆசிரியர்களும் அழைத்துவரப்பட்டனர்.

மங்கள விளக்கேற்றலினைத் தொடர்ந்து மேஜர் சோதியா அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 18.06.1998 அன்று மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 2 ஆம் லெப். ஒளியவனின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.

தமிழ்ச் சோலை கீதம் இசைக்கப்பட்டு நிறைவடைந்ததும், வரவேற்புரை, தலைமையுரை என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து மாணவர்களின் பல் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் அரங்க நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணும் வகையில் அமைந்திருந்தன.
எண்ணற்ற பல்வேறுபட்ட நடனங்கள், கரகாட்டம், பின்னல்கோலாட்டம், சுரத்தட்டு இசை, பறைஆட்டம், தாளலயம், வயலின் இசை, தண்ணுமை இசை, தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள், பாடல்கள், வில்லுப்பாட்டு, கவிதை, கூத்து, நாட்டிய நாடகம், ஆற்றுகைத்தர மாணவர்களின் இசை நிகழ்வு என மாணவர்களின் அரங்க ஆற்றுகைகள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்திருந்தன.

ஒரேமேடையில் 20 இற்கும் மேற்பட்ட பாரதியார் வேடமணிந்த மாணவர்கள் வரலாற்றில் தடம்பதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
முதன்மைவிருந்தினராக பிரபல தண்ணுமைக்கலைஞர் சங்கீதரத்தினம் திரு.பிரணவநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலான சிறப்புரையையும் வழங்கியிருந்தார்.

சோதியா கலைக்கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் வளர் தமிழ் 12 இனை நிறைவுசெய்த மாணவர்கள், ஆற்றுகைத்தரம் நிறைவுசெய்த மாணவர்கள் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர். சோதியா கலைக்கல்லூரியின் 30 ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் சிறப்பு மலரும் நிகழ்வில் வெளியிட்டுவைக்கப்பட்டது. சிறப்பு மலரின் முதற்பிரதியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் வெளியிட்டு வைக்க, நிர்வாகப்பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஏனைய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

மேலும் உரைகளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திருபாலசுந்தரம் அவர்களும், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் சார்பில் திரு.திவாகர் அவர்களும், தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் சார்பில் ஆசிரியர் திரு.அகிலன் அவர்களும் ஆற்றியிருந்தனர்.
தாயகத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் மண்டபத்தில் நிதி சேகரிக்கப்பட்டு, சோதியா கலைக்கல்லூரி நிர்வாகியினால், பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிதிப்பொறுப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.

சோதியா கலைக்கல்லூரியின் மாணவர்களே தமிழ் மக்களின் கலாசார உடையோடு, நிகழ்வுகளை திறம்படக் கொண்டுசென்றமையும் இங்கு பாராட்டத்தக்கது.
பிரான்சில் தொடர்ச்சியாக போக்குவரத்துப் பணிப் புறக்கணிப்பு இடம்பெற்றுவரும் நிலையிலும் பெரும் எண்ணிக்கையில் பெற்றோர்களும், மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து குறித்த நிகழ்வு சிறப்புற ஒத்துழைத்த அனைவருக்கும் சோதியாக் கலைக்கல்லூரியின் நிர்வாகத்தினரின் சார்பில் நன்றியுரைக்கப்பட்டது.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)