அதிக விலையில் உணவுப் பொதிகளை விற்றால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை !

199 0

அதிக விலையில் உணவுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் ஹோட்டல்கள் , உணவகங்களில் உணவுப் பண்டங்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் , நாடளாவிய ரீதியில் காணப்படும் உணவகங்களின் தூய்மை தொடர்பில் ஆராய்ந்து பார்த்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உணவுப் பொதிகள் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளுக்கான விலையை அதிகரிக்க உள்ளதாக குறிப்பிட்டு உணவக உரிமையாளர்களின் சங்கத்தினரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்தி தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ள இந்த இயக்கம் அதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உணவக உரிமையாளர்கள் எவ்வித காரணமுமின்றி விலையை அதிகரிக்க தீர்மானித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் , இவ்வாறு அதிக விலையில் விற்பனை செய்யும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுகர்வோர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பெருமளவானவைகளின் சுத்தம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதால்,அங்கு உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வது ஆரோக்கியமாக அமையாது.

ஆராக்கியமான உணவை பெற்றுக் கொடுப்பதின் நோக்கில் அரசாங்கம் விவசாய அமைச்சின் ஊடாக நச்சுத் தன்மையற்ற சுத்தமான உணவை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இவ்வாறான இடங்களில் எமக்கு தேவையான உணவுகளை பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்ற ‘சிறந்த போசனை சாலைகள்’ மேலும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

உணவு பொதிகளுக்கான பெறுமதி மற்றும் தரம் தொடர்பில் நுகர்வோர் மத்தியில் பல சிக்கல்கள் காணப்படுவதுடன், இதற்கான உரிய பெறுமதியை நிர்ணயிக்குமாறே நாங்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றோம். இந்நிலையில் உணவு பொதிகளை தயாரிக்கும் போது வைக்கப்படும் நோற்றின் அளவு மற்றும் மீன் , இறைச்சி மரக்கறிவகைகளின் அளவுகள் தொடர்பிலும் தெரிந்துக் கொள்ளமுடியும்.

சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிக்கப்பட்டாலும் உணவகங்களில் குறைந்த விலையில் விற்பனைச் செய்யப்படும் மரக்கறிகளே கொள்வனவு செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் உணவகங்கள் விலை அதிகரிப்பை மேற்கொள்வது எவ்வித்திலும் நியாயமாகாது.

இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களின் சுத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களிடம் வேண்டுகோள் விடுப்பதுடன் , சுத்தமின்றி காணப்படும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.