”ஜனாதிபதி ஒருபோதும் தவறாக அதிகாரத்தை பயன்படுத்தமாட்டார்”- ஜி. ல்

205 0

அரசியலமைப்பின் பிரகாரம்  ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டார். கடந்த அரசாங்கத்தின் பிரதான அரச தலைவர்கள் அதிகார துஷபிரயோகம் செய்தமையினாலே மக்களால் இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என  பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ அரசியலமைப்பின் ஊடாக  வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை செயற்படுத்துவாரா என்ற கேள்வி இன்று தோற்றம் பெற்றுள்ளன.  ஜனாதிபதிக்கு  பொது மன்னிப்பு  வழங்கும் அதிகாரம் உரித்துடையாக்கப்பட்டுள்ளது என்ற  காரணத்தினால்  அவரால்  ஒருபோதும் தான்தோண்றித்தனமாக செயற்பட முடியாது

நீதிமன்றத்தினால் குற்றவாளி என கருதப்பட்டு தண்டணை விதிக்கப்பட்டுள்ள ஒரு கைதிக்கு ஜனாதிபதி எவ்வாறான  வழிமுறைகளை பின்பற்றி பொதுமன்னிப்பினை வழங்க வேண்டும் என்பது தொடர்பில் அரசியலமைப்பின்  ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகார அத்தியாயங்களில் தெளிவாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனை கைதிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவாராயின் பின்வரும் விடயங்களை அவர் கையாள வேண்டும்.

குறித்த கைதிக்கு மரண தண்டனையிணை விதித்த நீதிபதியிடம் முதலில் பொதுமன்னிப்பு தொடர்பான அறிக்கையினை  பெறுதல் அவசியமாகும். நீதிபதியால் வழங்கப்படும்  அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு அது  நீதியமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது  ஆலோசனைகளையும் பெற வேண்டும். இவ்வாறான மூன்று சுற்றுக்களிலும் ஒருமித்த கருத்தே   காணப்பட வேண்டும் முரண்பட்ட அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெறுமாயின் ஜனாதிபதி தனது தீர்மானம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறான வழிமுறைகள் கடந்த அரசாங்கத்தினால் பின்பற்றப்படவில்லை . அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக ஒருபோதும் அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ய முடியாது.   கடந்த அரசாங்கத்தின் அரச தலைவர்கள் தங்களின் அதிகாரங்களை  தன்னிச்சையாக செயற்படுத்தியமையின் விளைவால் இன்று மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ  நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு இன்று சேவை செய்கின்றார். ஜனாதிபதி ஒருவரால் மாத்திரம் நாட்டை  நிர்வகிக்க முடியாது. நிர்வாகத்துறையும், சட்டத்துறையும் இணக்கமாக செயற்பட வேண்டும். கடந்த அரசாங்கத்தில் இரு பிரதான தாபனங்களும் முரண்பட்டுக் கொண்டமையினால் நாடு   பாரிய  விளைவுகளை எதிர்க்கொண்டுள்ளது. இந்நிலைமை மீண்டும் தோற்றம்  பெற கூடாது.

ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படும் பாராளுமன்றத்தை தோற்றுவிக்க மக்கள் முழுமையான ஒத்துழைப்பு   வழங்க வேண்டும். ஏப்ரல் மாதம்  இறுதி வாரத்தில் பொதுத்தேர்தல் இடம் பெறும்  மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடனான அரசாங்கத்தை அமைப்பதே  எமது பிரதான இலக்காக காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளின்  ஆதரவுடன் எமது  இலக்கு வெற்றிப் பெறும் என்றார்.