சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கு புதிய நடைமுறை –கோட்டாபய

274 0

கனரக வாகன உரிமங்களுக்கான முழு மருத்துவ பரிசோதனையையும், குறைந்த வலுக்கொண்ட வாகன உரிமங்களுக்கு கண் பரிசோதனையையும் மட்டுமே பெற்றுக்கொள்ள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பயணிகள் போக்குவரத்து அமைச்சின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலை விடுத்தார்.

அந்தவகையில் “கனரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு மட்டுமே முழுமையான மருத்துவ பரிசோதனைச் சான்றிதழ் பெறப்படவேண்டும். ஆனால் இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு கண் பார்வைப் பரிசோதனை சான்றிதழ் மட்டும் போதுமானது” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரமொன்றை வழங்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ பரிசோதனை தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கவனம் செலுத்தினார். அந்தவகையில் இலகுரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு கண் பார்வைப் பரிசோதனை சான்றிதழை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறையில் நிலவும் சிக்கல் நிலையை தெளிவுபடுத்திய ஜனாதிபதி, இலகு ரக வாகனங்களுக்கு கண் பரிசோதனை மாத்திரம் போதுமானது என்பதை சுட்டிக்காட்டினார்.

இதற்கான பரிசோதனையை வைத்தியசாலையில் பெற்றுக்கொள்வது தொடர்பாக கண்டறியவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. முழுமையான மருத்துவப் பரிசோதனை கனரக வாகனங்களுக்கு சாரதி அத்தாட்சிப் பத்திரங்களுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பிரச்சினைகளை மிகக் குறுகிய காலத்திற்குள் இனங்கண்டு மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த  சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுமாறு ஜனாதிபதியால் மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.