நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை – சென்னை காவல்துறை

285 0

நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆங்கில ஆண்டான 2019 முடிவடைந்து, புதிய ஆண்டான 2020 வரும் ஜனவரி 1-ம் தேதி வரவுள்ளது. புத்தாண்டை இனிதே வரவேற்க மக்களும் தயாராகி வருகின்றனர். இதற்காக தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பல இந்து கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.
இதேபோல், மெரினா கடற்கரையில் அன்றிரவு ஏராளமான பொதுமக்கள் குவிய தொடங்கி விடுவார்கள். மெரினா கடற்கரையில் கூடுபவர்கள் நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, பலூன்கள் பறக்கவிட்டு புத்தாண்டை வரவேற்பார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
இதுதவிர, சென்னை நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் பல்வேறு இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு புத்தாண்டு கொண்டாடுபவர்கள் கேளிக்கை நடனங்களில் ஈடுபடுவது வழக்கம்.
இதனால் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்ப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் போலீசார் நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நட்சத்திர, கேளிக்கை விடுதிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நட்சத்திர விடுதிகள் இரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.